ஜமா- விமர்சனம்
தமிழில் கூத்துக்கலை பற்றிய ஒரு அழுத்தமான படைப்பு ஜமா
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆன்மிக கூத்துக்கள் மிகவும் பிரபலமானது. அங்கு ஒரு கிராமத்தில் சேத்தன் தலைமையில் கூத்து நிகழ்த்துகிறார்கள். அவர்கள் போடும் கூத்தில் குந்தி வேடம் அல்லது திரளெபதி வேடம் பூணுபவராக உள்ளார் படத்தின் நாயகன் பாரி இளவழகன். அவரின் ஆசைகளில் முக்கியமான ஒன்று, ஒருநாளாவது அர்ஜுனன் வேசம் போடவேண்டும் என்பது. ஆனால் வாத்தியாரான சேத்தன் அதற்கு இசைய மறுக்கிறார். மேலும் சேத்தனின் மகளான அம்மு அபிராமிக்கு பாரி இளவழகன் மீது காதல். பாரி சேத்தனை மீறி காதலிலும் லட்சியத்திலும் எப்படி ஜெயிக்கிறார்? என்பது படத்தின் திரைக்கதை
நாயகனாக பாரி இளவழகன் இந்தப் படம் மூலம் அழுத்தமான பதிவை இட்டுள்ளார். மிகச்சிறந்த நடிப்பு. படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும் அவரே என்பது கூடுதல் தகவல். சேத்தன் எனும் மாபெரும் நடிகரை விடுதலை படத்திற்கு பிறகு இந்தப்படத்திலும் அடையாளம் காணலாம். வேறலெவலில் நடித்துள்ளார். அம்மு அபிராமி தன் காதலை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் யார் ஆம்பளை என்று விளக்கம் அளிக்கும் காட்சி ஒன்றிலும் பின்னியிருக்கிறார்
இசைஞானி இளையராஜா தனது பின்னணி இசையால் படத்திற்கு பெரும்பலம் சேர்த்துள்ளார். ஒளிப்பதிவாளர் கோபி கிருஷ்ணனின் கேமரா கதையின் கண்பிடித்தும் நமது கை பிடித்தும் படத்திற்குள் பயணிக்கிறது. ஆர்ட் வொர்க்கும் மேக்கப் டிப்பார்மெண்டும் சிறப்பாக பணியாற்றியுள்ளன
தேர்ந்த திரைக்கதை மூலம் நாயகனின் எளிமையான ஆசையை வலிமையாக்கியுள்ளனர். சின்னச் சின்ன தொய்வுகள் ஆங்காங்கே தென்பட்டாலும் படம் முடிவடையும் போது நமக்குள் ஒரு பாசிட்டிவ் வைப்-ஐ உருவாக்குகிறது. அதுதான் இப்படத்தின் வெற்றி எனலாம்
ஜமா- காண வேண்டிய முயற்சி
3.25/5