ஜீவி2- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

ஒரு படத்தின் பெரு வெற்றி அப்படத்தின் அடுத்தப்பாகத்தை எடுக்கத் தூண்டுவது இயல்பான ஒன்று. மேலும் அது படத்தின் வியாபாரத்திற்கும் உதவும். அந்த வகையில் 2019-ல் வெளியான ஜீவி படத்தில் இரண்டாம் பாகம் தற்போது ஆஹா ஓடிடியில் வரும் 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

நாம் பிறருக்கு தீமை நினைத்தால் அது நம்மை எப்படியுன் வந்து சீண்டும் என்ற ஒன்லைனை அடிப்படையாக வைத்தப்பின்னப்பட்டிருக்கும் கதை ஜீவி2. நாயகன் வெற்றி தன் வறுமையை கடக்க, ஒரு திருட்டைச் செய்கிறார். அந்தத் திருட்டுக்குப் பின்னால் இருக்கும் பல சுவாரஸ்யமான எமோஷ்னலான திருப்பங்கள் தான் படத்தின் கதை

கதையின் நாயகன் வெற்றி தன் கேரக்டருக்கு நியாயம் செய்துள்ளார். சின்னச் சின்ன மேனரிஜங்களிலும் மெனக்கெட்டு நடித்துள்ளார். நாயகி அஷ்விணி விழித்திறன் சவால் கொண்ட கேரக்டரில் எதார்த்தமாக நடித்துள்ளார். கருணாகரன், மைம்கோபி உள்பட திரையில் தோன்றும் யாரும் நடிப்பில் குறை வைக்கவில்லை. முபாஷீரின் நடிப்பும் பாராட்டத்தக்கது

சுந்தரமூர்த்தியின் பின்னணி இசையும் பாடல்களும் கூடுமான வரை கதைக்கு உதவியுள்ளது. ப்ரவீர்குமாரின் ஒளிப்பதிவில் எதார்த்தம் இருந்தாலும் சற்று வறுமையும் தெரிகிறது. பட்ஜெட் ஒளிப்பதிவோ என்னவோ?

ஜீவி படத்தில் முன்பாதியில் சிக்கலான காட்சிகளை வைத்து பின்பாதியில் அதை அழகாக விளக்கியிருப்பார்கள். ஆனால் ஜீவி2-வில் அந்த மேஜிக் மிஸ்ஸிங். படம் துவங்கி நெடுநேரம் கடந்தும் கதைக்குள் நுழையாமல் தவிக்கும் திரைக்கதை நம் பொறுமையை சற்றே சோதிக்கிறது. என்றாலும் பின்பாதி வேகமாக கடக்கிறது. முழு நிறைவைத் தராத ஜீவி2 முக்கால் கிணற்றை தாண்டியிருப்பதும் நிஜம்

2.75/5
#Jiivi2