வெளிநாட்ல இருந்தாலும் நினைப்பெல்லாம் தமிழ்சினிமா தான்! : ஜப்பானிலிருந்து கோடம்பாக்கம் வந்த தொழிலதிபர்

வேலை நிமித்தமாக வெளிநாட்டுக்குச் சென்றாலும் நம் லட்சியம் என்னவோ அதைத்தான் நம் மனசும் அசை போட்டுக் கொண்டே இருக்கும்.
என்றைக்காவது அதை அடைந்தே தீருவது என முடிவெடுத்து விட்டால் பொறுமையாக காத்திருப்பது தான் அதற்கான ஆகச் சிறந்த வழி. அப்படி ஒரு பொறுமையான வழியில் ஜப்பானிலிருந்து கோடம்பாக்கத்துக்கு வந்து ‘காதலின் தீபம் ஒன்று’ குறும்படத்தில் தனது ஹீரோ கனவை நிஜமாக்கியிருக்கிறார் இளம் தொழிலதிபர் சுரேஷ் நல்லுசாமி.
”சின்ன வயசிலிருந்தே என்னோட ஆசை சினிமாவுல ஹீரோ ஆகணும்கிறது தான். இருந்தாலும் படிப்பு, அதை முடிச்ச பின்னாடி ஜப்பான்ல வேலைன்னு போனாலும் இன்றைக்கும் என் மனசு முழுக்க சினிமா ஆசை தான்.
யூ-ட்யூப்ல வர்ற எல்லா தமிழ் வீடியோக்களையும் பார்த்து விடுவேன். அப்படித்தான் அசரீரிங்கிற குறும்படத்தையும் பார்த்தேன். எனக்கு ரொம்ப கவர்ந்திடுச்சு. கடந்த 2016 ஆம் ஆண்டு ‘ராடம் பிலிம் பெஸ்டிவெல்’ குறும்பட போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற சிறந்த குறும்படம் தான் அது. உடனே அந்தப் படத்தோட இயக்குநர் ஜி.கேவை தேடிப்பிடிச்சி பேசினப்போ ‘காதலின் தீபம் ஒன்று’ என்ற குறும்படத்தை ஆரம்பிச்சோம். அதை நானே தயாரித்து ஹீரோவாகவும் நடித்து விட்டேன் என்கிறார் சுரேஷ் நல்லுசாமி.
பொதுவாகவே காதலில் தோற்ற இளைஞன் வாழ்க்கையில் மிகப்பெரிய இடத்தை பிடித்து பல சாதனைகளை புரிவது போலவும், அதை நினைத்து நினைத்து முன்னாள் காதலி வருத்தப்படுவது
போலவும் கதைக்களம் அமைப்பது தான் சினிமாவில் வழக்கம். ஆனால் யதார்த்தம் அப்படி மட்டும் இருப்பதில்லைங்கிற அதோட இன்னொரு கோணத்தை சொல்கிற படம் தான் இது என்கிறார் இயக்குநர் ஜி.கே. இவர் அதர்வா, ஸ்ரீ திவ்யா, நரேன் நடிக்கும் பரணேஷ் என்பவர் இயக்கத்தில் உருவாகும் ‘ஒத்தைக்கு ஒத்த’ படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
”படத்தைப் பார்த்த எல்லோருமே ரொம்ப நல்லா நடிச்சிருக்கே”ன்னு பாராட்டுறாங்க, கூடிய சீக்கிரமே படத்தை வெளியிடப்போறோம். அதுக்கப்புறம் வர்ற ஆடியன்ஸ் கமெண்ட்ஸ் எப்படி இருக்குன்னு எதிர்பார்த்துக் காத்துக்கிட்டிருக்கேன் என்றவர் விரைவிலேயே பெரிய திரையிலும் எண்ட்ரி போடத் தயாராகி வருகிறாராம்.
நம்பிக்கை அதானே எல்லாம்..?