அடுத்தடுத்து நலத்திட்ட உதவிகளைச் செய்து பாராட்டுகளை குவிக்கும் விஜய் ரசிகர்கள்!

தன் அபிமான ஹீரோக்களின் படங்கள் ரிலீசானால் போஸ்டர் ஒட்டுவது, கட்-அவுட் வைப்பது, பேனர் கட்டுவது, பாலாபிஷேகம் செய்வது இவைகளை மட்டும் தான் ரசிகர்கள் செய்வார்களா?
இல்லை இல்லை அதையும் தாண்டி மக்கள் நலப்பணிகளையும் நாங்கள் செய்வோம் என்று அடுத்தடுத்த செயல்கள் மூலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பங்களுக்கு உதவிகள் செய்தது உட்பட கடந்த சில வாரங்களாகவே விஜய் மக்கள் இயக்கத்தின் கீழ் தளபதி ரசிகர்கள் எண்ணிலடங்கா நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்.

அதேபோல் மார்ச் 3-ம் தேதியும் மதுரை மாவட்ட விஜய் மன்ற இளைஞரணி அமைப்பாளர் பாண்டியன் கிழக்கு ஒன்றியம் சூர்யா அவர்கள் சார்பாக ஏற்பாடு செய்த விழாவில் 100 வேஷ்டிகள் மற்றும் 100 சேலைகள் , 40 சில்வர் பாத்திரங்கள் , 50 சில்வர் குடங்கள் , 10 மண்வெட்டிகள் , 1 கன்றுக்குட்டி
ஆகிய நலத்திட்ட உதவிகளை மதுரை மேலூரில் உள்ள ஒத்தகடை பகுதியில் மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி மற்றும் மேலூர் ஒன்றிய இளைஞரணி தலைவர் குஷிகுமார் சார்பாக அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் திரு.புஸ்ஸி .N .ஆனந்த் (EX .MLA ) அவர்கள் வழங்கினார்..
இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மதுரை வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் அன்பன் ,கல்லானை தெற்கு மாவட்ட தலைவர் தங்கபாண்டி மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
படங்கள் ரிலீசாகாவிட்டாலும் விஜய் ரசிகர்கள் அண்மைக்காலமாக செய்து வரும் இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது.