காளிதாஸ்- விமர்சனம்

RATING : 3.5/5
ராட்சசன் போல ஒருபடம் பார்க்கணும் என்பவர்கள் காளிதாஸ் படத்திற்கு டிக்கெட் எடுக்கலாம். கிட்டத்தட்ட ராட்சசன் அளவிற்கான மெனக்கெடல் படத்தில் இருக்கிறது. மாடிகளில் இருந்து விழுந்து சாகும் குடும்பப்பெண்களின் கொலைகளுக்கு யார் காரணம் என்ற கண்டுபிடிப்பு தான் இந்தப்படம்.
நேர்மையான போலீஸ் அதிகாரியான பரத் தன் மனைவியுடன் அதிக நேரம் செலவிடாமல் வேலை வேலை என்று சுற்றுகிறார். அவர் மனைவியின் மனது வேறோர் இளைஞனை சுற்றுகிறது. ஒருபுறம் மாடிகளில் இருந்து பெண்கள் விழுந்து இறந்துகொண்டே இருக்கிறார்கள். இந்த இரண்டு முடிச்சுகளுக்குள் இருக்கும் அட்டகாசமான விசயங்கள் தான் காளிதாஸ் படத்தின் கதை. (அந்த வேறோர் இளைஞனின் ட்விஸ்ட் அதகளம்)
மிகச்சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளார் பரத். அதட்டல் இல்லாத உடல்மொழி அதி அற்புதமாக அவரின் கேரக்டருக்குப் பொருந்துகிறது. ஆதவ் கண்ணதாசன், நெகட்டிவ் கேரக்டர் போன்ற தோற்றத்தை திரையில் அழகாக வெளிக் கொணர்ந்துள்ளார். நாயகி அன் ஷீத்தலின் நடிப்பும் படத்திற்கு பெரும்பலம். சுரேஷ்மேனன் அசால்டாக நடித்து பல இடங்களில் அட போட வைக்கிறார்.
படத்தின் டெக்னிக்கல் ஏரியா மிரட்டுகிறது. விசால் சந்திரசேகரின் பின்னணி இசை நல்ல பாய்ச்சல். ஒளிப்பதிவும் சவுண்ட் டிசைனும் படத்தின் தரத்தை உயர்த்தி உள்ளன.
லாஜிக் குறைகள் அங்கங்கு எட்டிப்பார்த்தாலும் படத்தில் வரும் சில எமோஷ்னல் விசயங்கள் நம்மைக் கட்டிப்போட்டு விடுகின்றன.
இந்த வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு மோசமானது அல்ல. நாம் தான் நமக்கான அக நெருக்கடிகளை உருவாக்கிக் கொண்டுள்ளோம். குடும்பத்தோடு செலவழிக்கும் கொஞ்ச நேரத்தையும் கொஞ்சல் நேரமாக மாற்றினால் எஞ்சி நிற்கும் வாழ்க்கை இனிமையாக இருக்கும் என்கிறது காளிதாஸ்.