கடவுளே மனசு வெச்சுட்டார்! : தடை நீங்கி ரிலீசாகிறது ‘கடவுள் இருக்கான் குமாரு’
கடவுளையே துணைக்கு கூட்டிக் கொண்டு சென்றாலும், பஞ்சாயத்தை கூட்டுவதற்கென்றே சிலர் பின்னாடி வண்டி கட்டி வருவார்கள் போலும்!
அதிலும் சமீபகாலமாக தமிழ்த்திரையுலகில் பிரபல தயாரிப்பாளர்கள் ரிலீஸ் நேரத்தில் கோர்ட் படியேறாமல் படத்தை நிம்மதியாக ரிலீஸ் செய்வது என்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது.
அப்படியொரு இடியாப்பச் சிக்கலில் திடீரென்று மாட்டியிருந்த படம் தான் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தயாராகியிருக்கும் ”கடவுள் இருக்கான் குமாரு”.
ஜி.விக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி- ஆனந்தி நடித்திருக்கும் இப்படத்தின் எல்லா வேலைகளும் பரபரவென்று நடந்து முடிந்து ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருந்த நேரத்தில் ரிலீசுக்கு தடை விதிக்க வேண்டுமென்று சில தினங்களுக்கு முன்பு கோர்ட் படியேறினார் விநியோகஸ்தர் ஒருவர்.
அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் 10ம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தும் விட்டது. அப்போதும் விடாத விநியோகஸ்தர் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்று இன்று புதிய மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.
ஆனால் அப்படி விசாரிக்க வேண்டி வந்த மனுவை நிராகரித்த நீதிமன்றம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் நவம்பர் 10 ஆம் தேதி தான் விசாரிக்கப்படும் என்று நிராகத்து அனுப்பி விட்டதாம்.
இதற்கு முன்பும் இப்படி ரிலீஸ் நேரத்தில் நெருக்கடிக்குள்ளாகும் படங்களின் பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட படங்களுக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடியானது தான் வரலாறு. அந்த வகையில் ”கடவுள் இருக்கான் குமாரு” படமும் தடையை உடைத்து வருகிற 10-ம் தேதி உலகம் முழுக்க ரிலீசாகிறது.