இனிமே நெறைய படங்கள்ல நடிக்கணும் – நிக்கி கல்ராணியைப் பார்த்து சபதம் எடுத்த ஜீவா
பேசுவதற்குத் தான் என்பது போய் இப்போதெல்லாம் பேசுவதைத் தவிர மீதி எல்லா வேலைகளுக்குமான சாதனமாகி விட்டது ஸ்மார்ட்போன். ஆனால் இப்படிப்பட்ட ஸ்மார்ட்போன்களால் மனித சமூகத்துக்கு என்னென்ன தீமைகள் ஏற்படுகிறது என்பதை புட்டுபுட்டு வைக்கும் படமாக தயாராகியிருப்பது தான் ‘கீ’.
‘நாடோடிகள்’, ‘ஈட்டி’, ‘மிருதன்’ ஆகிய வெற்றி படங்களை தயாரித்த குளோபல் இன்போடெய்ண்மென்ட் தயாரிக்கும் கதாநாயகனாக ஜீவா, நாயகியாக நிக்கி கல்ராணி மேலும் இவர்களுடன் அணைகா, ஆர்.ஜே பாலாஜி, பத்ம சூர்யா, ராஜேந்திர பிரசாத், சுகாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய காலீஸ் கதை, திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
அடுத்த மாதம் ரிலீசுக்கு தயாராகியிருக்கும் இப்படத்தைப் பற்றி இயக்குனர் காலிஸ் பேசியதாவது, ”செல்போன்கள் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம் இது. ஒரு நான்கு வயது குழந்தை ஸ்மார்ட்போன் வைத்திருந்தால் அந்த குழந்தை இந்த படம் பார்க்க வேண்டும். ஒரு 70 வயது முதியவர் செல்போன் பயன்படுத்தினால் அவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும். நாம் செய்யும் லைக்குகள், நாம் செய்யும் ஷேர்கள் இவற்றால் நடக்கும் பின்னணி என்ன? என்பதை எடுத்து சொல்லும் படம் தான் இது” என்றார்.
பின்னர் பேசிய நடிகர் ஜீவா, ”வருடத்திற்கு ஒரு படம் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நிக்கி கல்ராணியை பார்த்து தான் பல படங்கள் பண்ண வேண்டும் என எண்ணம் மனதில் தோன்றியது. நிக்கி கல்ராணியுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அருமையான கதையைக் கொண்டது இத்திரைப்படம்.
தற்போதைய டெக்னாலஜியில் வளர்ந்து வரும் பிரச்சனையை கூறும் படமாக அமைந்துள்ளது. காலீஸ் சிறந்த இயக்குனர் .இதுபோன்ற நிறைய இளைய புதுமுக இயக்குனர்கள் நம் தமிழ் சினிமாவிற்கு தேவை. இளைய இயக்குனர்கள் வந்தால் தான் புதிய எண்ணங்கள் தோன்றும். புதிய எண்ணங்கள் இருந்ததால் தான் பல பரிமாணங்களில் திரைப்படங்களை தர முடியும்.
இந்த படம் ஏப்ரல் 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது .உங்கள் அன்பாலும் ஆதரவாலும் படம் வெற்றி பெறும் என நம்புகிறேன்.” என்றார்.