களம் – விமர்சனம்
RATING : 3/5
அநியாயமாக சொத்தை அபகரித்தவனிடமிருந்து அதை மீட்பதற்காக ஒட்டு மொத்த குடும்பமும் நின்று நிதானமாக விளையாடுவது தான் இந்த ‘களம்’.
அடுத்தவர்களின் சொத்துகளை மிரட்டியே ஆட்டையைப் போடும் பலே லோக்கல் ரியல் எஸ்டேட் ரெளடி மதுசூதன்.
வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வசிக்க வரும் அவருடைய மகன் ஹீரோ அம்ஜத்துக்கு ஒரு பழைய பங்களாவையும் சீப்பாக முடிக்கிறார்.
அந்த பங்களாவுக்கு குடிபோகும் அம்ஜத்தும், அவரது மனைவி லட்சுமி ப்ரியாவும் அங்கு நடக்கும் சில அமானுஷ்ய சம்பவங்களால் அதிர்ச்சியடைகிறார்கள்.
அந்த வீட்டில் பேய்கள் இருப்பதாகவும், அவைகளை விரட்டினால் சரியாகி விடும் என்றும் வீட்டுக்கு வரும் இளம் பெண் ஓவியரான பூஜா மூலம் தெரிந்து கொள்கிறார்கள்.
உடனே அந்த பேயை விரட்ட மந்திரவாதி சீனிவாசனின் உதவியை நாடுகிறார்கள். வீட்டை விட்டு பேய்கள் வெளியேறியதா? அல்லது அம்ஜத் தனது குடும்பத்தோடு அந்த பங்களாவை விட்டு வெளியேறினாரா? என்பதே கிளைமாக்ஸ்.
லைட்டுகள் அணைந்து அணைந்து எரிவது, நள்ளிரவானால் திடீரென்று சத்தம் கேட்பதும், அதைக் கேட்டு நாயகி முழிப்பு வந்து சத்தம் வந்த இடத்தை நோக்கிப் போவது, குளிக்கும் போது ஷவரில் ரத்தம் வருவது என வழக்கமான பேய் வகையறா படங்களில் இருக்கும் சமாச்சாரங்கள் ஆங்காங்கே வரிசைக்கட்டி வந்தாலும் கிளைமாக்ஸில் வரும் அந்த ட்விஸ்ட் மொத்த படத்தையும் தரப்படுத்தி விடுகிறது.
ஹீரோ அம்ஜத்தும், ஹீரோயின் லட்சுமி ப்ரியாவும் ஒரு குழந்தையோடு கணவன், மனைவியாகவே அறிமுகமாவதால் இருவருக்கும் ரொமான்ஸ் காட்சிகள் என்று எதுவுமில்லை. பல படங்களில் நாயகி பேயைப் பார்த்து பயந்து நாயகனிடம் சொல்லவும் அவர் நம்ப மாட்டார். பிறகு அவருக்கே அப்படி ஒரு அனுபவம் வரும்போது நம்புவார். அப்படி ஒரு கதாபாத்திரம் தான் ஹீரோ அம்ஜத்துக்கு. கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
இரவுக் காட்சிகளில் கண்களில் பயத்தை வைத்துக் கொண்டே ஒவ்வொரு அறையாக போகும்போதும் சரி, மாடிப்படிகளில் பயத்துடன் கீழே இறங்கும் போதும் சரி முகத்தில் பயத்தை அளவாக காட்டியிருக்கிறார் லட்சுமி ப்ரியா.
மாடர்ன் ஓவியராக வரும் பூஜாவும், மந்திரவாதியாக வரும் சீனிவாசனும், வேலைக்காரியாக வரும் கனி ஆகியோர் அவ்வப்போது எட்டிப் பார்த்தாலும் கிளைமாக்ஸில் அவர்களுக்கான முக்கியத்துவத்தை இயக்குநர் வலுவாக கொடுத்திருக்கிறார். மேஜிக் மேனாக வரும் நாசர் அதைப்போலவே சில நொடிகளில் படத்திலிருந்தும் மறைந்து போகிறார்.
விஜய் சேதுபதியின் ‘பீட்சா’ படத்தை ஞாபகப்படுத்துகிற கதை! இருந்தாலும் ஒளிப்பதிவு, கலை, பின்னணி இசை என டெக்னிக்கல் விஷயங்களால் படத்தை சுவாரஷ்யப்படுத்தியிருக்கிறார்கள்.
ஒரே ஒரு பங்களா, அதற்குள்ளே நடக்கும் சம்பவங்கள் என கிளைமாக்ஸுக்கு முந்தைய காட்சிகள் வரை அநியாயத்துக்கு மெதுவாக நகர்கிறது படம். இருந்தாலும் ஒளிப்பதிவு, கலை, பின்னணி இசை என டெக்னிக்கல் விஷயங்களில் எக்ஸ்ட்ராவாக கவனம் செலுத்தி அந்த ஸ்லோமோஷனை சுவாரஷ்யப்படுத்தியிருக்கிறார்கள்!
ரசிகர்கள் யூகிக்க முடியாத ட்விட்டை வைத்து புத்திசாலித்தனத்தை காட்டிய இயக்குநர் ராபர்ட் ராஜ் படம் முழுமைக்கும் அதை காட்டியிருந்தால் வெற்றியும் முழுமையாக கிடைத்திருக்கும்.
களம் – மிரட்டல்!