கமலி from நடுக்காவேரி- விமர்சனம்

ஒரு ஆண் படித்து முன்னேறினால் அவன் குடும்பத்திற்கு நல்லது. அதுவே ஒரு பெண் படித்து முன்னேறினால் சமூகத்திற்கே நல்லது. பெண்களின் கல்வியை முன்னிறுத்தும் படங்களை முன் நின்று வரவேற்பது நமது கடமைகளில் ஒன்று. அதனால் முதலில் படத்தைப் பார்த்து விடுங்கள்.

கிராமத்தில் குறும்புத்தனமும் நல்ல படிப்புத் திறனும் கொண்ட கமலியை மேல் படிப்பு வைக்காமல் திருமணம் முடித்து வைக்க முடிவெடுக்கிறார் அப்பா அழகம்பெருமாள். அதற்கு உடன்படாத கமலி சென்னை ஐஐடியில் படிக்க வருகிறார். அதற்கு ஊக்கச்சக்தியாக மாநிலத்தில் முதலிடம் பிடித்த நாயகன் ரோஹித்தின் வார்த்தைகள் உந்துதலாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து வரும் சுவாரஸ்யமான பயணம் தான் மொத்தபடமும்.

படத்தின் ஆகப்பெரும் பலம் நடிகர்களின் தேர்வு. கயல் ஆனந்தி பரியேறும் பெருமாளில் ஜோவாக மாறியது போல..இந்தப்படத்தில் கமலியாக ஈர்க்கிறார். உயிர்ப்புள்ள பாத்திரத்திற்கு மிகப்பெரிய வலு சேர்த்துள்ளார். அவரைத் தொடர்ந்து பிரதாப்போத்தன், அழகம்பெருமாள், ரோஹித், இமான் அண்ணாச்சி என படத்தில் தோன்றிய அனைவருமே படம் முடிந்த பின்பும் மனதில் தோன்றுகிறார்கள். திரைக்கதை வடிவமைப்பின் நேர்த்தி தான் இப்படியான கேரக்டர்களை உருவாக்குகிறது. இயக்குநருக்கு இதற்காகவே ஸ்பெசல் பாராட்டு!

படத்தின் இசையும் ஒளிப்பதிவும் நடிகர்களின் பங்களிப்பு போலவே இயல்பாக அழகாக இருக்கிறது.

பின்பாதியின் வேகம் முன்பாதியிலும் இருந்திருக்கலாம் என்பதைத் தவிர படத்தின் போக்கை எங்கேயும் குறைசொல்லவே முடியாது. ஒரு தேவையான கருத்தை ரசிகர்களை சோர்வடைய விடாமல் சொன்ன விதத்தில் இயக்குநர் ராஜசேகர் துரைசாமியை மனதாரப்பாராட்டலாம்!
3.75/5