கமரகட்டு – விமர்சனம்
தமிழ்சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருக்கும் பேய் பட சீஸனுக்கு புதிதாக வந்து சேர்ந்திருக்கும் படம் ‘கமரகட்டு.’
இளவட்டப்பசங்களின் பள்ளிக்கூட காதலை ஆவி, ஆன்மீகம் என கலந்து கட்டி புதிதாக தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ராம்கி ராமகிருஷ்ணன்.
‘கமரகட்டு’ என்கிற ஸ்ட்ராங்க்கான உருண்டையை கடித்தால் இனிக்கும். அதையே கவனமாக கடிக்காவிட்டால் பல்லே உடைந்து விடும். அப்படிப்பட்டது தான் பள்ளிக்கூட காதலும் என்கிற விஷயத்தை சொல்லியிருக்கிறார்கள்.
யுவன், ஸ்ரீராம் இருவரும் பிளஸ் டூ படிக்கும் போது அதே பள்ளியில் படிக்கும் ரக்ஷா ராஜ், மனிஷா ஜித் இருவரையும் காதலிக்கிறார்கள்.
கல்லூரிக்குப் போனதும் நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் காதலுக்கு குறுக்கே இரண்டு பணக்கார இளைஞர்கள் வருகிறார்கள்.
கல்லூரிக்கு வந்த முதல்நாளிலேயே அந்த இரண்டு இளைஞர்களும் ரக்ஷா ராஜ், மனிஷா ஜித் இருவரையும் ஆளுக்கு ஒரு ஜோடியாக காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
இந்த விஷயம் ஹீரோயின்களின் அம்மாவான சிந்துவுக்கு தெரியவர அவரும் மகள்களின் காதலை ஆதரிக்கிறார்.
அதோடு மகள்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமென்கிற பேராசையில் யுவன், ஸ்ரீராம் இருவரையும் அடியாட்களை வைத்து தீர்த்துக் கட்டுகிறார்.
இறந்த பின்பு ஆவியாக வரும் ஹீரோக்கள் இரண்டு பேரும் ஹீரோயின்களின் உடம்பில் புகுந்து கொண்டு அவர்கள் காதல் கல்யாணத்துக்கு இடைஞ்சல்களை கொடுக்கிறார்கள்.
அந்த இடைஞ்சல்களை எல்லாம் முறியடித்து ஹீரோயின்கள் பணக்கார இளைஞர்களை திருமணம் செய்தார்களா..? இல்லையா..? என்பதே கிளைமாக்ஸ்.
இளம் வயதில் வரக்கூடிய காதல் நிலையானது அல்ல. அது எந்த நேரத்திலும் விட்டுப் போகக்கூடியது தான். அதனால் அந்த வயதுக் காதல் சரியானதல்ல என்கிற சீரிய கருத்தை யுவன், ஸ்ரீராம் இருவருமே தங்கள் கேரக்டர்கள் மூலம் மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
காதலுக்காக தங்கள் படிப்பை தியாகம் செய்வதும், பின்பு அதே காதலிகள் ஏமாற்றி விட்டார்கள் என்று தெரிய வரும் போது அழுது புரண்டு ஆக்ரோஷத்துடன் பழி வாங்கப் புறப்படுவதும் என அந்த வயதுக்கே உரிய துடிப்பை பார்க்க முடிகிறது.
ரக்ஷா ராஜ், மனிஷா ஜித் என இரண்டு ஹீரோயின்களும் இளவயது ஹீரோயின்களாக பார்க்க அழகாக இருக்கிறார்கள். பணக்கார இளைஞர்களுடன் பழக்கம் ஏற்பட்டவுடன் பழைய காதலர்களை கழற்றி விட்டு ”இந்த உலகமே மாற்றங்களை நோக்கித்தான் போய்க்கிட்டிருக்கு..” என்று வசனம் பேசும் இடத்தில் நச்.
ஹீரோயின்களின் அம்மாவாக வரும் பாசக்கார அம்மாவாகவும் அதே சமயத்தில் வில்லியாகவும் வந்து கலக்குகிறார்.
வாசு விக்ரம், பாலாசிங், சேத்தன், சிந்து, கிரேன் மனோகர், தளபதி தினேஷ் என எல்லாக் கேரக்டர்களும் காமெடி கலந்து
ஆர்.ஸ்ரீதரின் ஒளிப்பதிவும், எப்.எஸ்.பைசலின் இசையும் பலம்.
பள்ளிப்பருவத்தில் வருகிற காதல் உண்மையான காதலாக இருக்க முடியாது. அது வெறும் இனக்கவர்ச்சியாக மட்டுமே இருக்க முடியும் என்கிற நிஜத்தை ஆன்மீகம், ஆவி என பேய் சீஸனுக்கு ஏற்றாற்போல் திரைக்கதை அமைத்து தந்த இயக்குனர் ராம்கி ராமகிருஷ்ணன் படத்தின் நீளத்தையும் கொஞ்சம் குறைத்திருந்தால் விறுவிறுப்பு கூடியிருக்கும்.