திறந்திடு சீசே – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

thirandhidu-seese-1

டுத்தர, ஏழை, அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்துக்கு உலை வைக்கும் கொடிய விஷமான மதுவினால் ஏற்படும் தீமைகள் ஏராளம்.

எஸ்.டி.டி பூத்துகளைப் போல ஆங்காங்கே அரசாங்கத்தால் திறந்து வைக்கப்பட்டு எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கியுள்ள மதுவினால் தனி ஒரு மனிதனுக்குள் நடக்கும் மாற்றங்களையும், அதற்கு அடிமையான ஒரு மனிதனின் மனநிலையையும் அப்பட்டமாக காட்டியிருக்கும் படம் தான் இந்த ‘திறந்திடு சீசே.’

சென்னையில் மேல்தட்டு வர்க்கத்தினர் சனிக்கிழமை ஆனால் கூடுமிடமான ஈ.சி.ஆர் ரோட்டில் உள்ள ஒரு பிரைவேட் பாருக்கு தனியாக சரக்கடிக்க வருகிறார் பணக்கார பெண்ணான தன்ஷிகா.

பாருக்குள் நுழைந்த அவளை பார்த்த மாத்திரத்திலேயே ‘கரெக்ட்’ செய்து விட வேண்டுமென்று துடிக்கிறார்கள் அங்கு வேலை பார்க்கும் வீரவன் ஸ்டாலின் மற்றும் நாராயண்.

அதற்காக ஆளாளுக்கு தன்ஷிகாவுக்கு ஓசியில் சரக்கை ஊற்றி கொடுத்து அவளை போதையில் தள்ளாட வைக்கிறார்கள்.

இரவு 11 மணி ஆனதும் பாரை மூடிவிட்டு வீரவன் ஸ்டாலின் தூங்கி விட அவனது நண்பனான நாராயண் அந்த நேரத்தில் பாத்ரூமுக்குப் போகிறார். அங்கே டாய்லெட்டில் பேச்சு மூச்சில்லாமல் அரைக்குறை ஆடையுடன் அடிபட்டு விழுந்து கிடக்கிறார் தன்ஷிகா.

அதிர்ச்சியடையும் நாராயண் வேகமாகப் போய் வீரவனை ஸ்டாலினை கூட்டி வந்து அவன் துணையோடு அவளை தூக்கி பாரில் உள்ள ஷோபாவில் படுக்க வைக்கிறான்.

மயக்கம் தெளிந்ததும் முழித்துப் பார்க்கும் தன்ஷிகா தன் உடம்பில் ஏதோ ஒரு மாற்றம் இருப்பதாக உணர ”உங்க ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தன் என்னை ரேப் பண்ணிட்டான்” என்று பெரிய குண்டை தூக்கிப் போடுகிறார்.

இருவருக்குமே அதிர்ச்சி.

”சத்தியமா நான் செய்யலீங்க…” என்று இருவரும் மாறி மாறி பதறுகிறார்கள். ஆனால் தன்ஷிகாவோ ”இல்ல உங்க ரெண்டு பேர்ல ஒருத்தன் தான் என்னை கெடுத்திருக்கணும். அது யாருன்னு நீங்களே சொல்லுங்க” என்று இருவரையும் துப்பாக்கி முனையில் மிரட்டுகிறார்.

நாராயணோ தனக்கு தெரிந்த பெண் மனோதத்துவ டாக்டரை கூட்டி வந்து தன்ஷிகாவை செக்கப் செய்கிறான். டாக்டரும் ”ஆமாம் இந்தப் பொண்ணை கற்பழிச்சிருக்காங்க…” என்று உறுதிப்படுத்துவதோடு அதை செஞ்சது வீரவன் ஸ்டாலின் தான் என்றும் சொல்கிறார்.

முழு போதையில் இருந்த வீரவன் ஸ்டாலின் தான் கற்பழித்தது நிஜம் தானா? இல்லையா? என்கிற குழப்பத்தில் இருக்க, அந்த சமயத்தில் அவரது மனைவி அங்கு வரவும் அவளை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்துக் கொள்ளும் தன்ஷிகா தன்னை கெடுத்த வீரவன் ஸ்டாலினை பழி வாங்க அவன் கண்முன்னாலேயே நாராயணை வீரவன் ஸ்டாலின் மனைவியை கற்பழிக்கச் சொல்கிறார்.

இந்த அதிரிபுதிரியில் வீரவன் ஸ்டாலின் ஒரு ப்ளாஷ்பேக்கை சொல்கிறார். இறுதியில் தன்ஷிகா சொன்ன கற்பழிப்பு குற்றச்சாட்டு உண்மை தானா? இல்லையா?  போன்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறது கிளைமாக்ஸ்.

ஹீரோவாக வீரவன் ஸ்டாலின் நடித்திருக்கிறார். படத்தின் தயாரிப்பாளரும் அவரே தான். முதல் படம் என்கிற எந்த அடையாளமும் தெரியாமல் தேர்ந்த நடிகரைப் போல நடித்திருக்கிறார். ”சொல்லு நீ அந்தப் பொண்ணை கற்பழிச்சியா” என்று காதல் மனைவி கேட்க ”எனக்கு தெரியல…’’  என்று அழுது புலம்பி மதுவுக்கு அடிக்ட்டான தனது மனநிலையை எண்ணி கலங்கும் காட்சியில் ரசிகர்களையும் கலங்க வைக்கிறார்.

மதுவுக்கு அடிமையான மனிதர்களின் மனநிலை அந்த நேரத்தில் எப்படி இருக்கும்? அவர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்வார்கள்? என்பதை தனது கேரக்டர் மூலம் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அவரது நண்பராக வரும் நாராயண் சீரியஸான சீனில் கூட அவர் செய்யும் சேட்டைகள் காமெடியாக போகிறது. ‘ரேப்’ என்ற வார்த்தையைக் கூட உச்சரிக்கப் பயப்பட்டு ”ஏங்க அந்த ‘R’ ஐ நான் செய்யலீங்க…” என்று சொல்லும் போது தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது.

பணக்கார வீட்டுப் பெண்ணாக வருகிறார் ஹீரோயின் தன்ஷிகா. ஏகப்பட்ட இடங்களில் ஒளிப்பதிவாளர் அவருக்கு குளோசப் காட்சிகளை வைத்து அழகுப்பதுமையாக காட்டியிருக்கிறார். மது அருந்தும் காட்சிகளில் எந்த கூச்சமும் இல்லை. அதிலும் வீரவன் ஸ்டாலின், நாராயண் இருவரையும் தன்னை கட்டிப்பிடிக்கச் சொல்லி வாசனையை நுகரும் காட்சிகளில் எந்த தயக்கமும் காட்டாமல் மிகவும் அன்யோன்யமாக நடித்திருக்கிறார்.

ஒரு மாஸ் ஹீரோ போல கிடைக்கிற சந்தர்ப்பங்களில் எல்லாம் கேரக்டரை உள்வாங்கி நிறைவான நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார். படம் முழுக்க தள்ளாடியபடியே இருந்தாலும் நடிப்பில் ‘ஸ்டெடியாக’ நின்று ஸ்கோர் செய்கிறார் தன்ஷிகா.

வீரவன் ஸ்டாலினின் மனைவியாக வரும் அஞ்சனா கீர்த்தி சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கிறார்.

பாரை நைட் எபெக்ட்டில் விதவிதமாக ஆங்கிள்களில் காட்டி காட்சிக்கு காட்சி போரடிக்காத ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் கொளஞ்சி குமார்.

கணேஷ் ராகவேந்திராவின் பின்னணி இசை ஒரு த்ரில்லர் படத்துக்கே உரிய ஸ்டைலுடன் நகர்கிறது.

பொதுவாக மதுவின் தீமைகளை எடுத்துச் சொல்கிற படங்களில் டாஸ்மாக் பாரை செட்டு போட்டு அதில் நடக்கும் உச்சபட்ச அசிங்கங்களையும், அவலங்களையும் காட்சிப்படுத்துவார்கள். இந்தப் படத்தில் அப்படிப்பட்ட கன்றாவிகள் எல்லாம் இல்லை. முழு படத்தையும் ஒரே ஒரு டீஸண்ட்டான பாருக்குள்ளேயே எடுத்து இறுதி வரை படத்தின் விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக் கொள்கிறார் இயக்குனர் நிமேஷ் வர்ஷன்.

ஒரு டாஸ்மாக் கடைக்குள்ளோ அல்லது அதனை ஒட்டியிருக்கும் பாருக்குள்ளோ நுழைந்தால் அந்த இடமும், சூழமும் எவ்வளவு கேவலமானதாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.

அப்படிப்பட்ட டாஸ்மாக் அசிங்கங்களை எந்த இடத்திலும் காட்டாமல் மதுவினால் ஏற்படும் தீமைகளை டீஸண்ட்டாக எடுத்துச் சொன்னதற்காக இப்படத்தின் இயக்குனர் நிமேஷ் வர்ஷனை பூங்கொத்து கொடுத்து வரவேற்கலாம்.