கனவு வாரியம் – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

RATING 2.8/5

நாடு முழுவதும் இன்றைய தேதியில் மக்களை வாட்டியெடுக்கும் பிரச்சனைகளில் பிரதானமானது மின் வெட்டுப் பிரச்சனை தான்.

இதை சமாளிப்பதற்காக நாம் சார்ந்திருக்கும் அரசாங்கத்தை மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல், மக்களாகிய நாமே நம்மிடமிருக்கிற வாய்ப்புகளைக் கொண்டு அதற்கான தீர்வைத் தேடிக்கொள்ளலாம் என்கிற கருத்தையும், எதிர்கால இந்தியா வளம்பெற இயற்கை விவசாயம் தான் தேவை என்கிற கருத்தையும் சமூகப் பொறுப்போடு சொல்லியிருக்கும் படம் தான் இந்த ‘கனவு வாரியம்.’

சிறு வயதிலிருந்தே ”அண்ணே இந்த ரேடியோ எப்படின்னே பாடுது?” என்று கேட்பதில் ஆரம்பித்து கண்ணில் படுகிற எந்தப் பொருளானாலும், அதைப்பற்றி யாரிடமாவது ஏதாவது சந்தேகத்தைக் கேட்பவர் ஹீரோ அருண் சிதம்பரம்.

அதோடு கையில் கிடைக்கிற சின்னச் சின்ன எலெக்ட்ரானிக் பொருட்களைக் கொண்டு எதையாவது புதுமையாக செய்து பார்க்க ஆர்வம் ஏற்பட, அதனால் எட்டாம் வகுப்போடு படிப்புக்கு முழுக்கு போட்டு விடுகிறார்.

அவனுடைய நடவடிக்கைகளைப் பார்த்து கிறுக்கன், முட்டாள் என்று ஊர் மக்கள் கேலி பேசினாலும், தன் ஊரில் இருக்கிற மின்வெட்டுப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு தானே புதிதாக ஒரு சாதனத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்.

இவர் முயற்சி ஒருபுறமிருக்க, அதே ஊரை சேர்ந்த யோக் ஜேப்பி சென்னையில் ஐ.டி துறையில் 2 லட்சம் ரூபாய் சம்பளத்தில் கிடைக்கிற வேலையை உதறிவிட்டு தன் கிராமத்துக்கு வந்து இயற்கை முறையில் விவசாயம் செய்ய தங்கை ஜியா சங்கரோடு வருகிறார் .

இந்த இருவரும் செய்யும் முயற்சிகளுக்கு முழுமையான வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

அறிமுகமான முதல் படத்திலேயே மின் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பது, இயற்கை விவசாயத்தை வளர்த்தெடுப்பது என இரண்டு முக்கியமான விஷயங்களை படத்தின் மெயின் தீமாக கையாண்டிருக்கும் இயக்குநர் அருண் சிதம்பரத்துக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.

படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் அருண் சிதம்பரம் தான் படத்தின் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். படிப்பு ஏறவில்லை என்றாலும் எதையாவது புதிதாக கண்டுபிடித்து தானும் சாதிக்க வேண்டும் என்கிற ஆவல் கொண்ட இளைஞர்.

ஊர் மக்கள் தன்னை ஒரு கிறுக்கனாகப் பார்த்தாலும் அதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் தனது சின்னச் சின்ன கண்டுபிடிப்பில் கூட சந்தோஷப்படும் அவர் சிரித்தபடியே எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு செல்வதில் நிறைவான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

நாயகியாக வரும் ஜியோ சங்கர் தன் காதலனின் ஒவ்வொரு கண்டுபிடிப்பிலும் மயங்கி அவனுடைய ஒவ்வொரு முயற்சிக்கும் தன்னால் ஆன பண உதவிகளையும் செய்கிற கேரக்டர். பாடல் காட்சிகளில் அருண் சிதம்பரத்தோடு செட்டாகவில்லை என்றாலும் சிட்டியிலிருந்து கிராமத்துக்கு வரும் அக்மார்க் சிட்டி கேர்ள் ஆக செட்டாகியிருக்கிறார்.

பல படங்களில் வில்லனாக வந்த யோக் ஜேப்பி இதில் ஒரு ஐ.டி இளைஞராக வருகிறார். லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்தும் அதில் துளி கூட சந்தோஷமில்லை என்கிற ஐடி ஊழியர்களின் மன ஓட்டத்தை இவரது கேரக்டர் பொட்டில் அடித்தாற் போல் சொல்லியிருக்கிறது.

”உங்களுக்கு புரமோஷன் கெடைச்சிருக்கு, இனிமே சம்பளம் 2 லட்சம் எப்படி பீல் பண்றீங்க?” என்று முதலாளி கேட்டதும் அவர் கழுத்தில் மாட்டியிருக்கிற டையை இறுக்கிப் பிடித்து ”இப்படித்தான் பீல் பண்றேன்” என டென்ஷனாகி பணத்தாசைக் காட்டி இளைஞர்களின் கழுத்தை நெருக்குகிற அளவுக்கு ஐ.டி. நிறுவனங்கள் தரும் பணிச்சுமையை குறிப்பிட்டுக் காட்டுகிறார்.

அப்பா எனக்கு படிப்பு வரல என்று மகன் சொன்னதும் அதிர்ச்சியடையாமல் உனக்கு என்ன செய்யணும்னு தோணுதோ? அதைச்செய்யுப்பா என்று மகனின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கிற அன்பான, அமைதியான கேரக்டரில் இளவரசு. இப்படி ஒரு அப்பா நமக்கும் அமையமாட்டாரா? என்று ஏங்க வைத்தாலும் படிப்பில்லாமல் எதிர்கால வாழ்க்கையே இல்லை என்றாகி விட்ட இந்த கால கட்டத்திலும் படிக்க மறுக்கும் மகனை எதுவும் சொல்லாமல் அவன் போக்கில் விடுகிற அப்பாக்கள் இருக்கிறார்களா என்பது சந்தேகமே?

அருண் சிதம்பரத்தின் நண்பனாக வரும் ப்ளாக் பாண்டி, ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்து போகும் கிரேன் மனோகர், டி.பி.கஜேந்திரன் மூவர் கூட்டணி சிரிப்புக்கு கேரண்டி.

புத்தகங்களோடு மிட்டாய்களை பின் பன்னி அதை வீடு வீடாகக் கொண்டு சென்று குழந்தைகளுக்கு படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு நல்லாசிரியராக வருகிற கு.ஞானசம்பந்தம் ஒரு நல்ல ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம்.

ஷ்யாம் பெஞ்சமினின் இசையில் ”கல்லா மண்ணா” பாடலில் நாம் மறந்து போன 50க்கும் மேற்பட்ட கிராமத்து விளையாட்டுகளை ஞாபகப்படுத்துகிறார்கள்.

”எதிர்காலத்துல விவசாய நிலம் வெச்சிருக்கிறவன் தான் கோடீஸ்வரன்” என்று விவசாயத்தின் அருமையை ஒற்றை வரி வசனத்தில் சொல்லுகிற காட்சியில் தியேட்டரே கை தட்டல்களில் அதிர்கிறது.

”வேகாத சோத்துக்கு விருந்தாளி ரெண்டு பேரு”

”எங்க தாத்தா காலத்துல தண்ணீரை வானம் கொடுத்துச்சு.

எங்க அப்பா காலத்துல தண்ணீரை வானம் கொடுத்துச்சு.

எங்காலத்துல தண்ணீரை பாட்டில்ல கொடுக்கிறாங்க.

எம்புள்ள காலத்துல தண்ணீரை எதுல கொடுப்பாங்களோ?” இப்படி நறுக்கான வசனங்களை படத்தின் விறுவிறுப்புக்காக ஆங்காங்கே வைத்திருக்கிறார் இயக்குநர் அருண் சிதம்பரம்.

மின்சாரம், இயற்கை விவசாயம் இந்த இரண்டும் தான் இந்தியாவின் வளம். அப்படிப்பட்ட இந்த இரண்டுமே இப்போது சந்தித்திருக்கும் சிக்கலை மிக அழகாக திரைக்கதையாக்கி காட்சிப்படுத்தி இந்த இரண்டு விஷயங்களிலும் நாம் விழிப்புணர்வை அடைவது முக்கியம் என்கிற கருத்தை காலச் சூழலுக்கு ஏற்ப சமூகப்பார்வையோடு முன் வைத்திருக்கிறது இந்த ”கனவு வாரியம்.”