விக்ரம் மகன் ஜோடி யார்? – மீண்டும் கிசுகிசுவில் அடிபடும் கெளதமி மகள்!

இயக்குநர் பாலா ஒரு படம் இயக்குகிறார் என்றால் அது எப்போது முடியும்? எவ்வளவு பட்ஜெட்டில் போய் நிற்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.
அதானாலேயே பாலாவை வைத்து ஒருமுறை படமெடுத்த தயாரிப்பாளர்கள் மீண்டும் அவரை வைத்து படமெடுக்க முன் வர மாட்டார்கள்.
அப்படிப்பட்டவர் தனது ‘நாச்சியார்’ படத்தின் வெற்றி மூலம் ஒட்டுமொத்த கோலிவுட்டையும் ஆச்சரியத்தோடு பார்க்கவும், பேசவும் வைத்திருக்கிறார்.
வெறும் 58 நாட்களில் அந்தப் படத்தை எடுத்து முடித்ததோடு சிறிய பட்ஜெட் படமாகவும் அவர் அதை எடுத்தது தான் கூடுதல் ஆச்சரியம்.
பாலாவின் இந்த வேகம் இனி வரப்போகும் அவருடைய புதுப் படங்களிலும் தொடருமா என்று எல்லோரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க விக்ரம் மகன் துருவை வைத்து தான் இயக்கப் போகும் வர்மா படத்துக்கான வேலைகளில் மும்முரமாகி விட்டார் பாலா.
தெலுங்கில் ஹிட்டடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கான இந்தப் படத்துக்கு ரதன் இசையமைக்க, சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ராஜு முருகன் வசனம் எழுதுகிறார். சமீபத்தில் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை நேபாளம் மற்றும் காத்மண்டுவில் வெற்றிகரமாக முடித்துத் திரும்பியுள்ளனர்.
இந்தப் படத்தில் துருவ் ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்த பாலா சூர்யாவின் ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷ்ரியா சர்மாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அது செட்டாகவில்லை. பிறகு ‘அர்ஜுன் ரெட்டி’ நாயகி ஷாலினி பாண்டேவே இந்த தமிழ் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. அதுவும் உறுதியில்லை என்றான பிறகு தற்போது நடிகை கெளதமியின் மகள் சுப்புலட்சுமியின் பெயர் கிசுகிசுக்கப்படுகிறது.
ஏற்கனவே கமலை விட்டு பிரிந்த பிறகு தனது மகள் சுப்புலட்சுமியை திரையுலகில் கதாநாயகியாக அறிமுகப்படுத்த கெளதமி திட்டமிட்டு வருகிறார் என்று செய்திகள் வெளியானது. ஆனால் அந்தச் செய்தியை மறுத்தார் கெளதமி.
தற்போது மீண்டும் சுப்புலட்சுமி சினிமாவில் நடிக்கப் போகிறார் என்று கிசுகிசு கிளம்பியிருக்கிறது. இதுவும் உண்மையா? பொய்யா? என்பதை கெளதமி தான் விளக்க வேண்டும்.