கசடதபற- விமர்சனம்
இப்போதெல்லாம் தமிழில் ஆந்தாலஜி, ஹைப்பர் லிங், என்ற பெயர்களை கேட்டாலே ஆடியன்ஸ் பதறி சிதறுகிறார்கள். காரணம் சமீபத்தில் பெரிய பெரிய ஜாம்பவான்கள் செய்த ஓடிடி சம்பவங்கள் அப்படி..ஆனால் வெந்த புண்ணிற்கு விசிறி வீசும் இதமாக ஒரு படைப்பைத் தந்து அசத்தியிருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.
புலியில் விட்டதை இப்படத்தில் புலிப்பாய்ச்சலில் சென்று பிடித்திருக்கிறார். சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் கசடதபற படத்தின் கதை ஆறு கிளைகளைக் கொண்டது. இறுதியில் ஆறும் சேர்ந்து யாரும் எதிர்பாராத வகையில் ஒரு இடத்தில் கூடுகிறது. பயந்தாங்கொள்ளி மனைவி, அவருக்கு ஒரு என்கவுண்டர் போலீஸ் கணவன், என ஒவ்வொரு கதாப்பார்த்திரங்களுக்கும் நிறைய மெனக்கெட்டு எழுதியிருக்கிறார் சிம்புதேவன். ஆறுகதைகளையும் தனித்தனியே சொன்னாலும் படம் பார்க்கும் சுவாரசியம் குறைந்து விடும். ஒன்றாக சொன்னாலும் ட்விஸ்ட் உடைந்து விடும். ஆக அந்த ஏரியாவை அப்படியே விடுவோம்.
கதை திரைக்கதையில் படம் எப்படி ஸ்ட்ராங்கோ அதே அளவிற்கு டெக்னிக்கலிலும் செம்ம ஸ்ட்ராங்க். ஆறு கதைகளுக்கும் ஆறு இசை அமைப்பாளர்கள், ஆறு ஒளிப்பதிவாளர்கள், ஆறு எடிட்டர்கள் என ஒவ்வொரு நபர்களும் அந்தந்த கதைக்களத்திற்குள் பயணித்து வெவ்வேறு உணர்வை அற்புதமாக தந்திருக்கிறார்கள். இவற்றை எந்த படைப்பு நேர்த்தியும் குறையாமல் இணைத்து மிக அடர்த்தியாக தந்திருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன். நடிகர்களில் பெரியவர் சங்கலி முருகனில் துவங்கி பிரித்வி பாண்டியராஜன் வரையில் அனைவருமே ஸ்கோர் செய்துள்ளனர். ஹரிஸ் கல்யாண், சாந்தனு, வெங்கட் பிரபு, சந்திப் கிஷன், என நடிகர்களின் லிஸ்ட் மிகப்பெரியது..மொத்தக் கதையையும் ஒத்த மாபியா கும்பல் கதையோடு இணைத்த விதத்தில் கசடதபற ஓர் அட்டகாச சினிமா அனுபவம்.
5.3/5