காமெடி மட்டுமில்லை… சமூக அக்கறையும் உண்டு : ‘புலி’யுடன் களமிறங்கும் ‘கத்துக்குட்டி’

Get real time updates directly on you device, subscribe now.

kaththukutti1

ரேன் – சூரி காம்பினேஷனில் இரா.சரவணன் இயக்கத்தில் நூறு சதவிகித காமெடி படமாக உருவாகி இருக்கும் படம் ‘கத்துக்குட்டி’.

வருகிற அக்டோபர் முதல் தேதி திரைக்கு வரவிருக்கிறது. முதன் முறையாக இந்தப் படத்தில் கிராமத்து நாயகனாகக் களமிறங்கி இருக்கும் நரேன், காமெடி நடிப்பிலும் முத்திரை பதித்திருக்கிறார். கெட்டப் தொடங்கி கேரக்டர் வரை மிக வித்தியாசமான நரேனை இந்தப் படத்தில் ரசிகர்கள் பார்க்கலாம்.

‘கத்துக்குட்டி’ படத்துக்காக 32 நாட்களை ஒதுக்கிக் கொடுத்து ‘ஜிஞ்சர்’ என்கிற பாத்திரத்தில் காமெடி கச்சேரியையே நிகழ்த்தி இருக்கிறார் சூரி. ”கதையும் காமெடியும் பின்னிப் பிணைஞ்ச புது மாதிரியான திரைக்கதைதான் ‘கத்துக்குட்டி’யோட ஸ்பெஷல். என் வாழ்நாளுக்கும் நான் பெருமைப்படக்கூடிய படம் இது. வழக்கமான வார்த்தைகளா இதை நான் சொல்லலை. படத்தைத் தியேட்டர்ல பார்க்குறப்ப நான் எவ்வளவு ஆத்மார்த்தமா இதைச் சொல்லி இருக்கேன்னு எல்லோருக்கும் தெரியும். அவ்வளவு நம்பிக்கையான படம்.” என நெகிழும் சூரி, படத்தில் ‘காதல்’ சந்தியாவுடன் இணைந்து ஒரு பாடலுக்கு போட்டி ஆட்டமும் போட்டிருக்கிறார்.

‘கன்னக்குழி அழகி’ ஸ்ருஷ்டி டாங்கே தஞ்சை மண்ணின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் விதமாக கிராமத்து நாயகியாக நடித்திருக்கிறார். இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் குணச்சித்திரப் பாத்திரத்தில் முதன்முறையாக அறிமுகமாகிறார்.

படத்தில் எந்த இடத்திலும் ‘கட்’ கொடுக்காமல் ‘யு’ சான்றிதழ் வழங்கி இருக்கும் தணிக்கை அதிகாரிகள், ”தஞ்சை மண்ணிலேயே வாழ்ந்த மாதிரியான மனநிலையை இயக்குநர் சரவணன் ஏற்படுத்திவிட்டார்” என மனமாரப் பாராட்டி இருக்கிறார்கள். தமிழக அரசின் வரிவிலக்கு குழு, படம் பார்த்த இரண்டாவது நாலே வரிவிலக்கு வழங்கி படக்குழுவைப் பாராட்டி இருக்கிறது.

”நூறு சதவிகித காமெடிப் படமாக ‘கத்துக்குட்டி’ உருவாகி இருந்தாலும், இன்றைய இளைய தலைமுறைக்கான மிக அவசியமான கருத்தையும் படத்தில் ஸ்ட்ராங்காக வலியுறுத்தி இருக்கிறோம். அதனால், படம் காந்தி ஜெயந்தியை ஒட்டி வெளிவந்தால் நன்றாக இருக்கும் எனத் திட்டமிட்டோம். நல்ல விஷயம் காந்தி ஜெயந்தியை ஒட்டி ரசிகர்களைச் சென்றடைந்தால் சிறப்பாக இருக்கும் என்பதே எங்கள் நோக்கம்” என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் மூவரும்.

அக்டோபர் முதல் தேதி தமிழகம் முழுக்க 240 தியேட்டர்களில் ‘கத்துக்குட்டி’ வெளியாக இருக்கிறது என்று சொல்லும் இயக்குநர் இரா.சரவணன் விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் பத்திரிகையில் நிருபராக பணியாற்றியவர்.

பத்திரிகையில் பணியாற்ற வரும் எல்லோருக்குள்ளும் சினிமா ஆசை இருக்கும். நானும் அப்படித்தான் சினிமா கனவுகளுடன் வந்தேன். அதற்கு பத்திரிகை உதவியாக இருந்தது. பத்திரிகையில் இருக்கும் வரை சினிமா பிரபலங்களிடம் கிடைக்கும் மரியாதை அதை விட்டு விலகினால் கிடைப்பதில்லை.

நான் பத்திரிகையிலிருந்து விலகி சினிமாவுக்குள் வந்தவுடன் கிடைத்த வரவேற்பு அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தது. யாருமே உதவ முன் வரவில்லை. அந்த நேரத்தில் தான் நடிகர் நரேன் என்னிடம் கதை கேட்டு உடனே நடிக்க சம்மதம் தெரிவித்தார். சக பத்திரிகையாளர் என்ற முறையில் தான் இந்தக் கருத்தை பதிவு செய்கிறேன்.

என்னதான் சினிமா நமக்கு புதிதாக இருந்தாலும் ஒரு சமூகப் பிரச்சனையை நாம் திரைப்படமாக்குவதிலும், சினிமாவிலேயே இருந்து இயக்குநர்களாக மாறுபவர்கள் படமாக்குவதிலும் பெரிய வித்தியாசங்கள் உள்ளது. அப்படிப்பார்த்தால் அவர்களை விட நம்மால் சிறந்த படைப்புகளை தர முடியும் என்கிறார் இரா. சரவணண்.