வாவ்…. : சிலிக்கான் சிலை அழகில் மயங்கிய கீர்த்தி சுரேஷ்!

‘காவியம்’ என்றதும் எப்படி தமிழ்சினிமாவின் பிரபல இயக்குநர்கள் நம் ஞாபகத்துக்கு வந்து போவார்களோ? அந்த திரையுலகப் பிரபலங்கள் மனசுக்குள் ‘ஓவியம்’ என்றதும் நினைவுக்கு வந்து போகிறவர் பிரபல ஓவியர் ஏ.பி. ஸ்ரீதர்!
பல முன்னணி ஹீரோக்கள், திரையுலக பிரபலங்கள் வீட்டுக்குச் செல்லும் போது அங்கு அந்தப் பிரபலம் ஓவியமாக காட்சியளித்ததை நீங்கள் பார்த்திருந்தால் சந்தேகமே இல்லாமல் அந்த அழகுக்குச் சொந்தக்காரர் ஸ்ரீதராகத்தான் இருப்பார்.
இப்படி ஓவிய உலகில் தனக்கென்று தனி இடம் பிடித்து முத்திரை பதித்து வரும் ஏ.பி.ஸ்ரீதர் கிளிக் ஆர்ட் மியூசியம், விண்டேஜ் கேமரா மியூசியம் போன்ற ஆச்சர்யங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக உருவாக்கியிருப்பது தான் “லைவ் ஆர்ட் மியூசியம்”.
உலகின் பல்வேறு இடங்களில் மெழுகு சிலை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. ஆனால் மெழுகு சிலைகளில் கிடைக்கும் துல்லியத்தை விட சிலிக்கானில் அதிகமான துல்லியமும் உயிரோட்டமும் கிடைக்கும் என்பதால் அன்னை தெரசா, அமிதாப் பச்சன், தோனி, ஜாக்கிசான், அர்னால்டு, சாய்பாபா, சார்லி சாப்ளின், மோனாலிசா, மைக்கேல் ஜாக்சன் போன்ற பல பிரபலங்களின் சிலைகளை தத்ரூபமாக வடிவமைத்துள்ளார் ஏ.பி.ஸ்ரீதர்.

மேலே உள்ள பிரபலங்களின் ஓவியங்களை ஏ.பி.ஸ்ரீதர், சிலை வடிவமைப்பை ரவி, ஆடை வடிவமைப்பை தக்ஷா தயாளன், ஆக்ஸசரீஸ்களை வினோத் என திறமையான குழு ஒன்றும் திறம்பட செய்து முடித்தது. இச்சிலைகளை நிறுவும் இடத்தின் அரங்க வடிவமைப்பை ஆர்ட் டைரக்டர் அப்பு அற்புதமாக அமைத்திருக்கிறார். கிரியேட்டிவ் டிசைன்சை சுதிர் மற்றும் ராகுல் மேற்கொண்டனர்.
திறமையான கலைஞர்களின் பங்களிப்போடு, வெகு சிறப்பாக உலகின் முதன் மாதிரி அருங்காட்சியகம் சென்னையில் அமைவது சென்னைக்கு பெருமையான ஒன்று. இப்படிப்பட்ட பெருமைக்குரிய விஜிபி ஸ்னோ கிங்டம் உள்ளே அமைந்துள்ள இந்த சிலிக்கான் சிலை அருங்காட்சியகத்தை, குத்து விளக்கு “தீட்டி” துவக்கி வைத்த கீர்த்தி சுரேஷ் சிலிக்கான் சிலைகளின் அழகில் தன்னையே பறி கொடுத்து விட்டார் என்பது அவருடைய பேச்சில் வெளிப்பட்டது.
‘ஸ்ரீதர் சார் மிகப்பெரிய திறமைசாலி. எந்த ஆர்ட் கேலரி போனாலும் அவர் வரைந்த ஓவியங்கள் இல்லாமல் இருக்காது. அவர் என்கிட்ட இந்த சிலிக்கான் ஐடியாவைப் பற்றி சொல்லும் போதே எனக்கு ரொம்பப் பிடித்து விட்டது. இது மட்டுமல்லாமல் இன்னும் நிறைய ஐடியாக்கள் அவரிடம் இருக்கிறது. அவை எல்லாமே சூப்பராக இருக்கும். அடுத்தடுத்து உங்களை ஸ்ரீதர் சார் ஆச்சரியப்படுத்துவார்.
இந்த சிலிக்கான் சிலை மியூசியம் ரொம்ப லைவ்வான அழகோட இருக்கு. இதை துவக்கி வைக்க என்னை அழைத்தது ரொம்ப ரொம்ப சந்தோசம். ரொம்ப நன்றி ஸ்ரீதர் சார்.” என்று கொஞ்சும் புன்னகையோடு சொன்னார் சிலிக்கான் சிலை அருங்காட்சியகத்தை துவக்கி வைத்த அழகுச் சிலை கீர்த்தி சுரேஷ்!
திறப்பு விழாவில் கலந்து கொண்டவர்கள் சிலைகளை பார்த்து வியந்ததோடு, சிலைகளுடன் விதவிதமான ஸ்டைலில் போட்டோஸ் எடுத்துக் கொண்டனர். சிலிக்கான் சிலைகள் அந்த அளவுக்கு பார்ப்பவர்களைக் கவரும் வகையிலும் தத்ரூபமாகவும் இருப்பதே அதன் காரணம் என்று ஓவியர் ஏ. பி. ஸ்ரீதர் உள்ளிட்ட லைவ் ஆர்ட் மியூசியம் குழுவினர் மகிழ்ச்சியோடு தெரிவிக்கின்றனர்.