KGF 2- விமர்சனம்
கோட்டையை தன்னகத்தே வைத்திருக்கும் மன்னனுக்கு எதிரான சதிகளை மன்னன் எப்படி முன்னின்று முடிக்கிறான் என்பதே KGF-2 படத்தின் கதை
யஷ் கருடனை கொன்றதாக KGF படத்தின் முதல்பாகம் முடிந்திருக்கும். கருடனைக் கொன்ற யஷ் அதிகாரத்தை தானே எடுத்துக்கொண்டு தன்னை எதிர்ப்போரை எல்லாம் வதம் செய்வதே இந்த இரண்டாம் பாகம். எழுத்தாக இப்படத்தில் நல்ல மெச்சூட் இருக்கிறது. அதனாலே படத்தில் தென்படும் லாஜிக் மீறல்களை நம் மனம் கவனிக்க மறுக்கிறது
யஷ் நடிப்பில் சென்றபாகத்தை விட இந்த பாகத்தில் பத்தடி எக்ஸ்ட்ரா பாய்ந்துள்ளார். எமோஷ்னல் காட்சிகள் குறைவாகவும் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாகவும் உள்ள இப்படத்தில் உழைப்பை அள்ளித் தெளித்துள்ளார் யஷ். வில்லனாக வரும் சஞ்சத் தத்தின் நடிப்பிலும் மிரட்டல். பிரதமராக வரும் ரகுநாத் ஆண்டன் சற்று நேரமே வந்தாலும் அதகளம் செய்துள்ளார். மேலும் படத்தின் ஹீரோயின், ஈஸ்வரிராவ், சரண் உள்பட அனைவரும் கவனம் பெறும் வகையில் நடித்துள்ளனர்
படத்தின் பிரதான பிதாமகர்கள் யார் என்றால் டோட்டல் டெக்னிக்கல் டீமும் தான். கேமராமேனில் துவங்கி, ஆர்ட் டிப்பார்ட்மெண்ட் வரை செதுக்கி செதுக்கி வேலை செய்துள்ளனர். சிஜி ஏரியாவும் ஓரளவு தரம் தான். பின்னணி இசையிலும் பாடல்களிலும் இசை அமைப்பாளர் தனித்துத் தெரிகிறார்.
படம் நெடுக சண்டைக்காட்சிகளில் இருக்கும் லாஜிக் மீறல்கள் நம்மை உறுத்தவே செய்கிறது. மேலும் சென்ற பாகத்தில் கண்களை நிறைத்த அம்மா செண்டிமெண்ட் இதில் மிஸ்ஸிங். மத்தபடி யஷ் என்ற யானையை வைத்து மெகா ஆக்ஷன் திருவிழா காட்டி அசரடித்திருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் நீல். ரத்தம் கண்களை கெதிகலங்க வைத்தாலும் யுத்தத்தின் சத்தம் காதுகளை பஞ்சராக்கினாலும் படம் முடியும் போது நம் மனதை நிறைத்து விடுவதால் படத்தை தியேட்டரில் காணலாம்
3/5