கொஞ்சம் கொஞ்சம் – விமர்சனம்
RATING : 2/5
நட்சத்திரங்கள் : கோகுல், ப்ரியா மோகன், நீனு, அப்புக்குட்டி, மதுமிதா மற்றும் பலர்.
இயக்கம் : உதய் சங்கரன்
சென்சார் சர்ட்டிபிகேட் : ‘U’
வகை : டிராமா \ குடும்பம்\ ரொமான்ஸ்
கால அளவு : 2 மணி நேரம் 11 நிமிடங்கள்
ஏழை, எளியவர்கள் இந்த சமூகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்வதென்பது அவ்வளவு எளிதானதல்ல என்கிற கருத்தோடு அக்கா – தம்பியின் பாசத்தையும் உள்ளடக்கியதாக வந்திருக்கும் படம் தான் இந்த ‘கொஞ்சம் கொஞ்சம்.’
அப்பா இல்லாத வீட்டில் தன்னை மட்டுமே நம்பியிருக்கும் அம்மா மற்றும் அக்காவின் வாழ்க்கைக்காக தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு வேலை தேடி வருகிறார் ஹீரோ கோகுல்.
அங்கு அப்புகுட்டி நடத்தும் பழைய இரும்புக் கடையில் வேலைக்கு சேர்கிறார். வந்த இடத்தில் நாயகி நீனு மீது காதல் வயப்படுகிறார். தன் பின்னாலேயே சுற்றி சுற்றி வரும் கோகுலின் காதலி ஒரு கட்டத்தில் ஏற்றுக் கொள்கிறார் நீனு.
இந்நிலையில் அக்காவின் திருமணத்தை நடத்த கோகுலில் அம்மா ஊரில் ஏற்பாடு செய்து வருகிறார். அந்த நேரத்தில் தம்பி கோகுல் வாங்கிக் கொடுத்த செல்போனை சார்ஜில் போட்டுக்கொண்டே பாட்டு கேட்கும் போது திடீர் தீ விபத்து ஏற்பட்டு தன் காதுகள் கேட்கும் திறனை இழந்து விடுகிறார். அதனால் அவருடைய திருமணம் நின்று விடுகிறது. இதனால் கவலையில் இருக்கும் அம்மாவில் ஒரு மழைநாளில் வீட்டுக்கு முன்னால் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு இறந்து விடுகிறார்.
இதனால் அம்மா இல்லாத அந்த ஊரில் வாழப்பிடிக்காமல் செவித்திறன் அற்ற தனது பாசமான அக்காவை கூட்டிக்கொண்டு தான் வேலை செய்யும் கேரளாவுக்கே வந்து விடுகிறார்.
வந்த இடத்தில் அக்காவுக்கு மீண்டும் காதுகள் கேட்க வைக்கும் மருத்துவ செலவுக்கு ஒரு லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. அதற்காக கேரளாவில் நடக்கப்போகும் நடனப்போட்டியில் பங்கெடுக்க முயற்சிக்கிறார். பணக்காரர்கள் பங்கெடுக்கும் ஒரு போட்டியில் ஏழை அவ்வளவு சீக்கிரத்தில் வெற்றி பெற்று விட முடியுமா? கோகுலில் அந்த முயற்சியை தனது செல்வாக்கு மூலம் தடுக்க நினைக்கிறார் அங்குள்ள ஒரு உயர் போலீஸ் அதிகாரி.
அதையும் முறியடித்து நடனப்போட்டியில் கோகுல் ஜெயித்தாரா? அவருடைய அக்காவின் காது கேளா குறைபாடு நீங்கியதா? கோகுலின் காதல் என்னவானது? என்பதைச் சொல்லுவதே கிளைமாக்ஸ்.
இந்த உலகத்தில் எளிய மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்கு வர நினைக்கிற போது அதற்காக அவர்கள் என்னென்ன அவமானங்களையும், தடங்கள்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதை அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் உதய் சங்கரன்.
மேக்கப் இல்லாமல் பழைய இரும்புக் கடையில் வேலை செய்யும் சாதாரண ஏழை இளைஞராக இயல்பாக நடித்திருக்கிறார் ஹீரோ கோகுல். அக்கா மீது அவர் வைத்திருக்கும் பாசமும், காதலியை கரம் பிடிப்பதற்கான அவரது போராட்டமும் நெகிழச் செய்கிறது.
நாயகியாக வரும் நீனு பார்க்கச் சின்னப் பெண் போல இருந்தலும் கொழுக் மொழுக்கென்ற அழகாலும், அசரடிக்கும் புன்னகையாலும் நம்மை கட்டிப் போடுகிறார்.
அக்காவாக வரும் பிரியா மோகன், துருதுருவென்ற நடிப்பிலும், செவித்திறன் போன பிறகான காட்சிகளில் நெகிழ்வான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பழைய இரும்புக் கடையின் முதலாளியாக வகிறார் அப்புக்குட்டி. தொழிலாளிகள் மீது இரக்கம் காட்டுகிற பண்புள்ள மனிதராக உயர்ந்து நிற்கிற அதே வேளையில் பெண்கள் விஷயத்தில் சபலமுள்ளவர் என்று காட்டியிருப்பதை தவிர்த்திருக்கலாம். அவரது மனவியாக வரும் மதுமிதாவும் தனது கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் அடடே…வென்று சொல்ல வைத்துச் செல்கிறார் வி மன்சூர் அலிகான்.
நிக்கி கண்ணணின் ஒளிப்பதிவும், வல்லவனின் இசையும் படத்துக்கு கூடுதல் பலம்.
ஆபாசக் குப்பைகள், வன்முறைகளுக்கு மத்தியில் காதல், குடும்பம், பாசம், செண்டிமெண்ட் என குடும்பத்தோடு சென்று ரசிக்கக்கூடிய எளிமையான படமாகத் தந்திருக்கிறார் இயக்குநர் உதய் சங்கரன்.