டி.இமானை ஹீரோவாக்கப் போறேன் : பட விழாவில் பாம் போட்ட சுசீந்திரன்!
‘அறம் செய்ய விரும்பு’ புருவத்தை உயர்த்த வைக்கிற இந்த டைட்டிலோடு புதுப்படம் ஒன்றை இயக்கிக் கொண்டிருந்தார் டைரக்டர் சுசீந்திரன்.
தற்போது படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் இந்த டைட்டிலை ”நெஞ்சில் துணிவிருந்தால்” என்று மாற்றி விட்டார். காரணம் பெரிதாக இல்லை என்றாலும் புதிதாக வைத்திருக்கும் டைட்டில் இன்னும் கூடுதல் எதிர்பார்ப்பை கிளறி விட்டிருப்பது நிஜம். இந்த டைட்டில் மாற்ற அறிவிப்பை ஒரு விழாவாக ஏற்பாடு செய்து தன் அப்பா நல்லுச்சாமியை வைத்தே டைட்டிலை அறிமுகம் செய்து வைத்தார்.
அவருடைய ஆசீர்வாதம் மட்டுமா..? அதே விழாவில் வந்திருந்தவர்கள் கைதட்டி பாராட்டக்கூடிய இன்னொரு விஷயத்தையும் செய்தார்.
கோவை ராஜ கணபதி நகரில் தன் வாழ்ந்த நாள் வரை அதிகபட்சம் 20 ரூபாயை மட்டுமே கட்டணமாக வாங்கி பொதுமக்களுக்கு மருத்துவ சேவையை அளித்து வந்த ” 20 ருபாய் டாக்டர் ” என்று அழைக்கப்படும் பால சுப்பிரமணியம் அவர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டும் பொருட்டு அவருடைய குடும்பத்தினரை விழாவுக்கு வரவழைத்து மரியாதை செய்து கெளரவித்தார்.
படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன், விக்ராந்த், துளசி, இசையமைப்பாளர் டி.இமான், அப்புக்குட்டி ஒளிப்பதிவாளர் ஜெ. லஷ்மண் , தயாரிப்பாளர் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினர் குழுமியிருக்க பேசிய டி.இமான் ” சுசீந்திரன் சார்கிட்ட இருக்கிற வேகம் மத்தவங்க கிட்ட நான் பார்க்கவே இல்லை. இந்தப் படத்துக்கே முதல்ல வந்தவர் ரெண்டு சாங்க் போட்டுக் கொடுங்கன்னு கேட்டார். நானும் போட்டுக் கொடுத்துட்டு அப்பாடா ஷூட்டிங் போயிட்டு வர்ற கேப்புல வேற படத்துல வேலை செய்யலாம்ணு நெனைச்சா அடுத்த 15 நாட்கள்ல அந்த ஷெட்யூலை முடிச்சிட்டு வந்து ஆர் ஆர் போட்டுக் கொடுங்கன்னு வந்து நிற்பார். அந்தளவுக்கு மனுஷன் செம ஸ்பீடு என்றார்.
பின்னர் பேசிய சுசீந்திரன் “இந்தப்படத்திற்கு அப்புறம், நான் முழுக்க முழுக்க புதுமுகங்களை வச்சு ஒரு படத்தை இயக்கிக்கிட்டிருக்கேன். ”ஓ காதல் கண்மணி” டைப்ல இருக்கும், எழுபது சதவீதம் படப்பிடிப்பை முடிச்சிட்டேன். அந்தப்படம் என்னோட வாழ்க்கையில ஒரு முக்கியமான படமா இருக்கும். என்றவர் இமான் பிரதர் எப்போ ஓ.கே சொன்னாலும் அவரை ஹீரோவா வெச்சு ஒரு படம் இயக்க ரெடியா இருக்கேன் என்று பாம் ஒன்றை தூக்கிப் போட்டார்.
சுசீந்திரன் அப்படிச் சொல்வதற்கும் ஒரு காரணம் இருந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டி.இமான் முன்பை விட உடல் இளைத்து ஒல்லியாக காட்சி தந்தார். அதனால் தான் அவரும் ஹீரோவாக முயற்சிக்கிறாரோ என்று தானே படம் இயக்கத் தயார் என்று மேடையில் அறிவித்தார்.
ஆனால் டி.இமானோ பதிலுக்கு வேண்டாம் என்று சைகை செய்தது குறிப்பிடத்தக்கது.