‘குற்றம் புதிது’ சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!

Get real time updates directly on you device, subscribe now.

ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

படம் குறித்து கதாநாயகன் தருண் விஜய் கூறியதாவது,

“என் வீட்டில் என் அப்பா , அம்மா, அக்கா எல்லோருமே டாக்டர் தான். என்னையும் டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என விரும்பினார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் எனக்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்ததால் நான் நடிகனாக போவதாக வீட்டில் கூறினேன். முதலில் அவர்கள் அதற்கு தயக்கம் காட்டினார்கள். பின்னர் எனது இலட்சியத்தை, ஆசையை புரிந்து கொண்டு நடிக்க அனுமதி கொடுத்தார்கள். அதன் பிறகு நடிப்புக்கு தேவையான அடிப்படை பயிற்சிகளை நான் முறைப்படி பயின்றேன். நல்ல கதைக்காக காத்திருந்த போதுதான் ’குற்றம் புதிது’ படக் கதையை இயக்குநர் நோவா கூறினார். அதில் நடிப்புக்கும், திறமையை வெளிப்படுவதற்கும் நிறைய வாய்ப்புகள் இருந்ததால் ஒப்புக்கொண்டேன். ஏற்கனவே நடிப்பு பயிற்சி பெற்றிருந்ததால் படப்பிடிப்பின்போது எனக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை. இயக்குநர் எப்படி சொன்னாரோ அப்படியே நடித்தேன். சந்தேகம் ஏற்படும் போது அவரே நடித்துக் காட்டுவார். அதை உள்வாங்கி நான் நடிப்பேன். கொரில்லா குரங்கு போல் கை கால்களை ஊன்றி நடப்பதற்காக நான் மூன்று மாதம் பயிற்சி எடுத்தேன். கை விரல்களை மடக்கிக்கொண்டு தரையில் ஊன்றி கைகளை முன்னும் அசைத்து நடந்தபோது எனது தோள்பட்டையே வீங்கிவிட்டது. அந்த சிரமத்தை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வலியை பொறுத்துக் கொண்டு காட்சி நன்றாக வரவேண்டும் என்பதற்காக 100% நடிப்பை வழங்கினேன். எனது நிஜப் பெயர் தருண். விஜய் என்ற பெயரை நானாகவே சேர்த்துக் கொண்டேன். அந்தப் பெயர் எனக்கு வலிமை தரும் என்பதால் சேர்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.