மீண்டும் மேக்கப் போடுகிறார் மனிஷா கொய்ராலா!

தமிழில் மணிரத்னம் இயக்கிய பம்பாய், ஷங்கரின் முதல்வன், இந்தியன் என பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்து வந்தார் பிரபல பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா.
புதுமுக நடிகைகளின் வரவால் வாய்ப்புகள் குறையவும் ஹிந்திப் படங்களில் நடிக்கப் போனார். அவரை மீண்டும் தனது மாப்பிள்ளை படத்துக்காக கூட்டி வந்தார் தனுஷ்.
படம் பெரிய அளவில் போகவில்லை என்பது ஒருபுறமிருக்க மனிஷாவும் அந்த கவலை இல்லாமல் மீண்டும் தனது சொந்த மாநிலத்துக்கே திரும்பிப் போனார். அவ்வப்போது தேடி வரும் படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
எதிர்பாராத விதமாக கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்தவருக்கு அமெரிக்க மருத்துவமனையில் 5 மாதங்கள் தீவிர சிகிச்சை தரப்பட்டது. அதையடுத்து அந்த நோய் முற்றிலும் குணமானது.
கடந்த இரண்டு வருடங்களாக கேன்சரின் பாதிப்பு துளியளவும் இல்லை என்கிற நிலை வரவும் மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்ட ஆரம்பித்திருக்கிறார் மனிஷா கொய்ராலா.
அவரின் இந்த ஆர்வத்தை எப்படியே தெரிந்து கொண்ட மலையாள இயக்குநர் லெனின் ராஜேந்திரன் மோகன்லாலை வைத்து தான் இயக்கி வந்த புதுப்படத்தில் மனிஷாவுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
”இந்தப் படத்தில் வேலை செய்த போது மனநிறைவோடும் சந்தோஷமாகவும் வேலை செய்தேன்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும் மனிஷா தொடர்ந்து தென்னிந்திய மொழிப்படங்களில் நடிக்க தயாராக இருக்கிறாராம்.