மிரள்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு தமிழில் ஒரு பேய்படம்

வாணிபோஜன் தன்னை சுற்றி எதோ அமானுஷ்யங்கள் நடப்பதாகப் பயப்படுகிறார். இதைப் போக்க அவரது கணவரான பரத் பலவித முயற்சிகள் எடுக்கிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் குலதெய்வத்தை வழிபட வேண்டும் என்று வாணிபோஜனின் அம்மாவிடம் ஒரு சோதிடர் சொல்ல, பரத் மனைவி மகனோடு மாமியார் ஊருக்குச் செல்கிறார். சென்று திரும்பும் போது ஓரிடத்தில் ஓர் பெரும் அசம்பாவிதம் நடக்கிறது. அதன் பின்னணி என்ன என்பதே படத்தின் கதை

பரத் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தலைவனாக நடித்துள்ளார். மனைவிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்க்கப் போராடும் காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார். வாணி போஜன் பய உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். பரத்தின் நண்பராக வருபவரும் சிறந்த ஆக்டிங். கே.எஸ் ரவிக்குமார் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்துள்ளார்.

பிராசாத் s.n பின்னணி இசையில் திரில்லரைக் கொடுக்கிறார். சுரேஷ் பாலாவின் கேமரா படத்தின் மற்றொரு ஹீரோ. ஒரே இடத்தில் நடக்கும் இரவுக்காட்சிகளை சிறப்பாக படமாக்கியுள்ளார். இயக்குநர் M. சக்திவேல் விக்டிம் யார் என்ற ட்விஸ்டை கடைசி வரை பிரில்லியண்டாக கொண்டு போயிருக்கிறார். ஆனால் இவை எல்லாவற்றையும் பொருத்தமற்ற காட்சி அமைப்புகளும் வசனங்களும் வீணடித்துள்ளன. வசனங்கள் எல்லாம் இப்போது ஷார்ப்பாக இருந்தால் தான் ரசிகர்களுக்குப் பிடிக்கும். க்ளைமாக்ஸில் கே.எஸ்.ரகுக்குமாரை வைத்து ஒரு பெரிய லாஜிக் ஓட்டையை மறைக்கிறார் இயக்குநர். ஆனால் அந்த ஓட்டை மறையவே இல்லை. பயம் காட்ட வைக்கும் காட்சிகளை வலிந்து திணிக்கவில்லை என்பதும் படத்தின் கூடுதல் ஆறுதல்
மிரள் – மிரட்டவில்லை
2.5/5