சினிமா நிகழ்வில் விஜய் முதல்வரானது குறித்து திருமா பேச்சு!

Get real time updates directly on you device, subscribe now.

 

நேற்று சென்னையில் மெளன மொழிகள் எனும் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் படக்குழுவினரை வாழ்த்தி தொல். திருமாவளவன் பேசியதாவது,

‘மௌன மொழிகள்’ என்ற அழகான தமிழ்த் தலைப்பைத் தேர்வு செய்த இயக்குநர் ஏ.சி. சௌந்தர் அவர்களை முதலில் பாராட்டுகிறேன். தமிழில் திரைப்படங்களுக்குப் பெயர் சூட்ட வேண்டும் என்று தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நாங்கள் வலியுறுத்திப் போராடியிருக்கிறோம். அந்த வகையில் ‘மௌன மொழிகள்’ என்பது கவித்துவமான தலைப்பு. பிரபல பாடகர் மனோ அவர்களின் மகன் ஷாகிர் மனோ, சிறு முதலீட்டில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பெரிய முதலீடுகளைக் கொண்ட திரைப்படங்களுடன் போட்டியிடுவது கடினமான சூழலில், பாலச்சந்திரன், ஸ்ரீமன், வேலுமணி போன்றவர்கள் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.

இன்றைய திரைப்பட உலகம் வெறும் பொழுதுபோக்குத் துறையாக மட்டும் இல்லை. சமூக மாற்றத்திலும், அரசியல் களத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வலிமை கொண்டது. குறிப்பாக, தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கும் அரசியலுக்கும் நீண்டகாலத் தொடர்பு இருந்து வருகிறது. ‘ரத்தக்கண்ணீர்’, ‘தண்ணீர் தண்ணீர்’ போன்ற திரைப்படங்கள் வணிகத்தைத் தாண்டி சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை. இன்றைய இளம் இயக்குநர்கள் முற்போக்குச் சிந்தனையுடன் திரைப்படங்களை உருவாக்கி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. சாதிப் பெருமிதம், பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கைகள் போன்றவற்றுக்கு இடமளிக்காமல், சமூக சமத்துவம், பெண்களின் ஆளுமை, ஜனநாயகச் சிந்தனை ஆகியவற்றை முன்னிறுத்தும் படைப்புகள் அதிகரிக்க வேண்டும்.

திரைப்படத்திற்கும் அரசியலுக்கும் தமிழ்நாட்டில் நீண்டகாலத் தொடர்பு இருந்து வருகிறது. திரைத்துறையின் தாக்கம் அரசியல் களத்திலும் பிரதிபலிக்கிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் நடிகர் விஜய் இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இதனை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வாகப் பார்க்க வேண்டும்

காதல் என்பது மனித வாழ்வியலோடு இயல்பாக இணைந்திருக்கும் ஓர் உணர்வு. அதை நல்ல காதல், தவறான காதல் என்று வரையறுக்க முடியாது. சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய திரைப்படங்கள் வரை காதல் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் ஆயிரக்கணக்கான திரைப்படங்களில் காதல் வெவ்வேறு கோணங்களில் பேசப்படும். அதேபோல், திரைப்படங்கள் வெறும் லாபத்தைக் கணக்கிடும் வணிகமாக இல்லாமல், சமூக முன்னேற்றத்திற்கும் மாற்றத்திற்கும் பங்களிக்கும் களமாக இருக்க வேண்டும். இளம் இயக்குநர்கள் இந்தப் புரிதலுடனும் உறுதிப்பாட்டுடனும் தங்களது படைப்புகளை உருவாக்க வேண்டும். அந்த வகையில் ‘மௌன மொழிகள்’ திரைப்படம் தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்று வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

மேலும், சிறு முதலீட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆர்.கே. அன்புசெல்வன் முன்வைத்துள்ளார். ஆண்டுதோறும் குறைந்தது 100 சிறிய திரைப்படங்களுக்காவது அரசு மானியம் வழங்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முயற்சி செய்வேன். சிறு முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதும், அவர்களை ஊக்கப்படுத்துவதும் எங்களைப் போன்றவர்களின் பொறுப்பு. புதிய இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தொடர்ந்து திரைப்படங்களை உருவாக்குவதற்கு உரிய ஆதரவு கிடைக்க வேண்டும். ‘மௌன மொழிகள்’ படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்