புதுமுகங்களை வைத்து படமெடுத்தால் இதுதான் கதியா? : அறிமுக இயக்குநரின் ஆதங்கம்

Get real time updates directly on you device, subscribe now.

munnodi1

திரையுலகில் வாரிசாக இருப்பவர்களை வாயாரப்புகழ்ந்து வரவேற்கும் மூத்தவர்கள் எந்த சினிமா தொடர்பும் இல்லாமல் வருபவர்களுக்கு அப்படி ஒரு சிவப்புக் கம்பள வரவேற்பைப் கொடுப்பதில்லை.

தானும் அப்படி பல அவமானங்களையும், வலிகளையும் சந்திக்க நேர்ந்தது என்று ஆதங்கத்தோடு பேசினார் புதுமுக இயக்குநர் எஸ்.பி.டி. குமார்.

ஸ்வஸ்திக் சினி விஷன் பி.லிட் மற்றும் சோஹன் அகர்வால்.எஸ் .பி.டி.ஏ.ராஜசேகர் வழங்கும் “முன்னோடி” பட இயக்குநரான குமார் தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார்…

“நான் சினிமா பற்றிய எந்தவித பின்னணியும் இல்லாத குடும்பத்திலிருந்து வந்திருக்கிறேன். என் அப்பா சினிமாவே பார்த்ததில்லை. எனக்கும் சினிமா பார்க்க அனுமதியில்லை. சினிமா இயக்கம் பற்றித் தெரியாது. ஆனால் இயக்க வேண்டும் என்று ஆசை மட்டும் இருந்தது.

18 வயதில் பிலிம் இன்ஸ்டிட்டியூட்டில் சேர ஆசைப்பட்டேன். ஆனால் முடியவில்லை. ஆனால் அடுத்த் 18 வருஷம் கழித்து தான் சினிமாவுக்கு அனுமதி கிடைத்தது. அதற்குள் மனைவி குழந்தைகள் என்று குடும்பம் மாறியிருந்தது. இருந்தாலும் நான் விடவில்லை. ஒரு படம் இயக்க 18 வருஷம் காத்திருந்தேன். அப்போது என்னை சினிமாவில் விடவில்லை இப்போது நானே சம்பாதித்து என் காசில் எடுத்து இருக்கிறேன். இப்போதும் கூட குடும்பத்தினர் கவலைப்படுகிறார்கள். இந்தப் படத்துக்காக இரண்டு வருஷம் கஷ்டப்பட்டேன். என் கஷ்ட நஷ்டங்களை குடும்பத்தினர் பொறுத்துக் கொண்டார்கள்.

kumar

அவர்களின் கவலை நான் சினிமாவுக்கு வந்து சிரமப்படக்கூடாதே என்பது தான். 18 வருஷம் சுமந்து கருவாகி உருவாகி வளர்ந்த குழந்தையை இரண்டு வருஷம் நெஞ்சில் சுமந்த அந்தக் குழந்தையை ஆடல், பாடல், விளையாட்டு எல்லாம் தெரிந்த அந்தக் குழந்தையை சுதந்திரமாக விளையாட திறமை காட்ட அனுமதிக்கிறார்களா? இல்லை. இவ்வளவு கஷ்டப்பட்டு ரத்தமும் சதையுமாக வளர்த்து இருக்கிறோம். ஆனால் யாரும் பார்க்கத் தயாரில்லை.

தியேட்டரில் போட்டால் பத்து பேர் வருவானா? என்கிறார்கள். ஒவ்வொருவரும் இப்படி நெஞ்சில் குத்துகிறார்கள். நல்லா இருந்தாலும் பார்க்க எவனும் வர மாட்டான் என்கிறார்கள். புதுமுகங்களை வைத்துப் படமெடுத்தால் கடலில் குதித்து சாக வேண்டுமா?

நல்லவேளை படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் சார் பார்த்தார். எதுவுமே நினைக்கவில்லை. நிஜமான அன்போடு அணுகினார். ஆதரவு கொடுத்து இருக்கிறார். படத்தை வெளியிடுகிறார். அவருக்கு நான் காலமெல்லாம் கடமைப்பட்டிருக்கிறேன்.

இதில் நிறைய பேர் நடித்து இருக்கிறார்கள் இருந்தாலும் இது ஒரு டெக்னீஷியன் படம் என்று தான் சொல்வேன். என் அடுத்தடுத்த படங்களில் நடிகர்கள் எல்லாம் மாறலாம். ஆனால் தொழில் நுட்பக் கலைஞர்களை மாற்ற மாட்டேன். அவ்வளவு உழைத்திருக்கிறார்கள்.” இவ்வாறு இயக்குநர் குமார் பேசினார்.

இந்நிகழ்வில் ‘முன்னோடி’ படத்தில் நடித்த நடிகர்கள் அர்ஜுனா, வினு கிருத்திக் , நிரஞ்சன் , சுமன் , சுரேஷ் , பாண்டியன் , நாயகி யாமினி பாஸ்கர் , நடன இயக்குநர் சந்தோஷ் , படத் தொகுப்பாளர் என்.சுதா , இசை யமைப்பாளர் கே.பிரபு சங்கர் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

முன்னதாக மக்கள் தொடர்பாளர் ஏ.ஜான் அனைவரையும் வரவேற்றார்.