14 பிரபலங்கள்; 100 நாட்கள்; ஒரே வீட்டில்! : அப்பப்ப எட்டிப் பார்ப்பாராம் கமல்!

Get real time updates directly on you device, subscribe now.

ல்மான்கான் தொகுத்து வழங்க பிரபல கலர்ஸ் ஹிந்தி சேனலில் ஒளிபரப்பாகி வரவேற்பைப் பெற்ற ரியாலிட்டி ஷோ தான் ”பிக்பாஸ்.”

ஒரே வீட்டுக்குள் பத்துக்கும் மேற்பட்ட பிரபலங்கள் பல நாட்கள் தங்கியிருக்கும் போது நடக்கிற சுவாரஷ்யங்கள் தான் இந்த நிகழ்ச்சியின் ஹைலைட். அப்படிப்பட்ட இந்த ரியாலிட்டி ஷோ தமிழில் விஜய் டிவியில் வரும் ஜூன் 25ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதால் இந்த நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

5 வயதில் இருந்து, கடந்த 58 வருடமாக சினிமாவிலேயே இருந்து கலைச்சேவை ஆற்றி வரும் சகலகலா வல்லவன் கமல்ஹாசனை விட சிறப்பான ஒரு தொகுப்பாளர் இங்கு கிடைக்க மாட்டார் என சிறப்பான ஒரு அறிமுகத்தை கொடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் அறிமுக பத்திரிகையாளர் சந்திப்புக்கு கமல்ஹாசனை வரவேற்றார் விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.

Related Posts
1 of 28

அப்போது பேசிய கமல்ஹாசன், “சினிமாவில் இதுவரை வில்லனாக, குள்ளனாக, நாயகனாக, போலீஸாக, அமெரிக்கனாக, இந்தியனாக நடித்திருக்கிறேன். நிஜத்தில் இந்தியனாக வாழ்ந்து வருகிறேன். இந்த நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு தமிழக குடும்பத்துக்குள்ளும் சென்றடைய ஒரு நல்ல வாய்ப்பாக இதை எடுத்துக் கொள்கிறேன். அமிதாப்பச்சன் நிறைய நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் வித்தியாசமாக செய்திருந்தார். அது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

kamal2

14 பிரபலங்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் எந்த வெளியுலக தொடர்பும் இல்லாமல் தங்குவார்கள். அவர்களை 30 கேமராக்கள் பதிவு செய்யும். அவற்றை நான் அவ்வப்போது கண்காணிப்பேன். கேமராக்கள் இருப்பதால் யதார்த்தம் போய் விடும் என்பது தவறு. பிக் பாஸ் வீட்டுக்குள் போன கொஞ்ச நேரத்தில் கேமரா இருப்பதையே பிரபலங்கள் மறந்து விட்டு, இயல்பாகி விடுவார்கள். நிச்சயம் இது யதார்த்தமான ஒரு நிகழ்ச்சியாக அமையும் என நம்பிகிறேன். பல சமயங்களில் நாங்கள் கூட கேமரா இருப்பதை மறந்து ஏதோதே பேசி சர்ச்சையில் சிக்கியதுண்டு என்று தன் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார் கமல்ஹாசன்.

இந்தியில் அமீர்கான் செய்த சத்யமேவ ஜயதே போல நிகழ்ச்சி ஏதும் செய்யாமல் இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறீர்களே? என ஒரு நிருபர் கேட்டதற்கு, அந்த மாதிரி விஷயங்களை நிகழ்ச்சி மூலம் தான் செய்ய வேண்டுமென்று இல்லை. அவரை விடவும் அதிகமாக நான் கடந்த பல வருடமாக செய்து வருகிறேன். இதை நான் பெருமையாக சொல்லிக் கொள்வேன்” என்றார் கமல்ஹாசன்.

ஜூன் 25ஆம் தேதி முதல் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. வார இறுதி நாட்களில் கமல் கலந்து கொள்ளுமாறு எபிசோடு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் பங்குபெறப்போகும் அந்த 14 பிரபலங்கள் யார் என்பதைப் பற்றி எந்த தகவலும் தரப்படவில்லை.