நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

 

naalu-police-1

டைட்டிலுக்கும், கதைக்கும் என்னப்பா சம்பந்தம்?னு படத்தை பார்த்துட்டு ஒரு வாரம் யோசிச்சாலும் அதுக்கான காரணம் கிடைக்காத படங்களை ஒரு பெரிய பட்டியலே போடலாம். ஆனா இந்தப்படம் அப்படியில்ல டைட்டிலே இது எந்த மாதிரியான படம்கிறதை மிக அழகா சொல்லிடுது.

அதாவது நல்லா இருந்த ஒரு ஊருக்குள்ள நாலு போலீஸ் நுழைஞ்சு தங்களோட சுயநலத்துக்காக செய்ற வேலைகளாக அந்த ஊரே எப்படி வெட்டு, குத்து கலவர பூமியா மாறுதுங்கிறது தான் படத்தோட கதை.

இந்த ஊரில் மது, புகை ஆகியவற்றுக்கு அனுமதியில்லை என்கிற அறிவிப்பு பலகையோடு வரவேற்கும் கிராமம் பொற்பந்தல். மேல சொன்ன மாதிரி எந்த கெட்ட பழக்கும் இல்லாத அமைதியான அந்த ஊர்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன். அதுல ஹீரோ அருள் நிதி, சிங்கம்புலி, பகவதி பெருமாள், ராஜ்குமார் இவங்க நாலு பேருக்கும் டூட்டி.

அட கேஷே இல்லாமல் அமைதியா இருக்கிற ஊருக்கு எதுக்கு போலீஸ் ஸ்டேஷன்னு நெனைக்கிற கவர்மெண்ட் அந்த போலீஸ் ஸ்டேஷனை இழுத்து மூடச் சொல்லிட்டு அந்த நாலு பேரையும் இராமநாதபுரத்துக்கு மாத்த உத்தரவை அனுப்புது.

இராமநாதபுரம் ஒரு கலவர பூமின்னு தெரிஞ்ச உடனே எப்படியாவது அங்க மாற்றல் ஆகிறதை தடுத்து இந்த ஊர்லேயே இருக்கணும்னு ஆசைப்படுறார் கான்ஸ்டபுள் சிங்கம்புலி.

அந்த சுயநலத்துக்காக அவர் செய்ற அடுத்தடுத்த சின்னச் சின்னத் தவறுகள் தான் நல்லா இருந்த ஊரை நாசமாக்குது. அதுக்காக அவர் என்னென்ன செய்றார்? சின்னாபின்னாமான அந்த கிராமம் மறுபடியும் நல்ல நெலைமைக்கு வந்துச்சா இல்லாயாங்கிறது தான் கிளைமாக்ஸ்.

ஓப்பனிங்கே இப்படி ஒரு ஊர்ல குடியிருந்தா எப்படி இருக்கும்னு ஆசைப்பட வைக்கிறாங்க. ஊருக்குள்ள போனா அப்படி ஒரு சுத்தம், பஞ்சாயத்து தலைவரே அடைச்சிக்கிட்டு இருக்கிற சாக்கடை கால்வாயில அடைப்பை எடுத்து விடுவார். தெரு விளக்கு எரியலேன்னே அவரே வேற லைட்டை மாத்துவார். டீக்கடைக்கு பால் ஊத்த வர்றவர் பாலை ஊத்திட்டு வெளியில இருக்கிற கல்லா பெட்டியில அவரே தனக்கான பணத்தை எடுத்துட்டுப் போவார். அவ்ளோ ஏன் ரெண்டு மூணு நாளா கீழ கெடைக்கிற தங்கச்சங்கிலி அப்படியே அதே இடத்துல கிடக்கும். யாருமே எடுக்க மாட்டாங்க… என இந்தியாவில் சாத்தியமில்லாத ஒரு கிராமத்தை நம் கண்முண்ணே காட்டி அதிசயிக்க வைக்கிறார்கள்.

டூயட்டுகளும், லவ் சீன்களும் இந்த ரெண்டையும் வெச்சுத்தான் படத்தோட ஹீரோ உதயநிதின்னு முடிவுக்கு வர வேண்டியிருக்கு. ஏன்னா கிட்டத்தட்ட அவருக்கு நிகரான ஒரு வெயிட்டான ரோலில் வருகிறார் காமெடியனான சிங்கம்புலி. ஹீரோவான அருள்நிதி ஸ்கோர் செய்யக்கூடிய எல்லா ஏரியாக்களையும் காமெடியனாக வரும் சிங்கம்புலிக்கு விட்டுக் கொடுத்திருக்கிறார். அருள்நிதிக்கு பெரிய மனசு. அந்த வகையில உண்மையிலேயே சிங்கம்புலி செம லக்கான ஆளு தான்! போலீஸ் கெட்டப்புல வர்ற அருள்நிதியும் செம கெத்தா வந்தாலும் எந்த பில்டப்பும் இல்லாமல் கேரக்டருக்கு என்ன தேவையோ அதுக்கேத்த மாதிரி அடக்கி வாசிச்சிருக்கார்.

ஹீரோயினா வர்ற ரம்யா நம்பீசன் படங்களில் பாடல்கள் பாடுவதில் செலுத்தும் கவனத்தை கொஞ்சம் உடம்பைக் குறைப்பதிலும் காட்டுவது உசிதம். இல்லையென்றால் பேசாமல் டிவியில் வாணியாகவோ, ராணியாகவோ போகிற சூழல் தான் வரும்போல…. இருந்தாலும் அருள்நிதியும் அவருக்குமான கனவுக்காதல் அழகான கவிதையாக ஈர்க்கிறது.

திருடனாக வந்து திருந்தி வாழும் யோகி பாபு இரண்டாம் பாதியில் வெயிட்டான கேரக்டரில் வருகிறார். அதுக்காக அவர் செய்யும் சில விஷயங்கள் லாஜிக்கும் இல்லாமல், காமெடியில் இல்லாமல் போவது வேதனை. களவணி திருமுருகன், குண்டு ஆர்த்தி இருவருடைய கேரக்டர்களும் அர்த்தமுள்ள கேரக்டர்கள்.

படம் ஆரம்பிக்கும் போது தனது திருமண பத்திரிகையை கொடுக்க வந்து பொற்பந்தல் ஊரைப்பார்த்து ஆச்சரியப்பட்டு விட்டுப் போகும் அந்த பெயர் தெரியாத நடிகர் இடைவேளைக்குப் பிறகு அதே ஊருக்கு தனது மனைவியுடன் வந்த சில நிமிடங்களிலேயே டூவிலரையும், தாலிச்செயின் உட்பட தங்க நகைகளையும் பறிகொடுத்து விட்டுப் போவது நல்ல காமெடி.

பி.ஆர். ரெஜின் இசை மனசை விட்டு அகலாத தாளம். மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவில் முதற்பாதி ஊரின் செழுமையையும், இரண்டாம் பாதியில் ஊரின் அலங்கோலத்தையும் மிக அழகாக பிரித்துக் காட்டியிருக்கிறது.

ஒரு முழுநீள காமெடிப் படத்தை தர ஆசைப்பட்ட இயக்குநர் திரைக்கதையை நகர்த்திக் கொண்டு போவதில் திக்கித் திணறியிருக்கிறார். எவ்வளவோ விஷயங்களை இன்னும் சேர்த்திருக்கலாம்.

திரும்பத் திரும்ப அதே ஊர், அதே போலீஸ் ஸ்டேஷன் என காட்சிகள் எங்கும் நகராமல் பொற்பந்தலிலேயே பந்தலைப் போட்டு உட்கார்ந்திருப்பது தான் பலவீனம். அந்த பலவீனத்தை கண்டுகொள்ளாமல் விட்டால் பேய், பில்லி, சூனியம், பிசாசுப் படங்களின் பிடியிலிருந்து தப்பிக்க இந்த நாலு போலீஸும் பெஸ்ட் சாய்ஸ் தான்!