“நேசிப்பயா’ ஸ்டைலிஷான விஷுவல் ட்ரீட்டாக இருக்கும்”-இயக்குநர் விஷ்ணுவர்தன்!

Get real time updates directly on you device, subscribe now.

இயக்குநர் விஷ்ணுவர்தனின் திரைப்படங்கள் எப்போதும் ஸ்டைலிஷான விஷூவல் மற்றும் சுவாரஸ்யமான கதைசொல்லலுக்கு பெயர் பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘நேசிப்பாயா’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மீண்டும் படம் இயக்கி உள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14, 2025 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.

படம் குறித்து இயக்குநர் விஷ்ணுவர்தன் பகிர்ந்து கொண்டதாவது, “உங்கள் சொந்த வீட்டிற்கு திரும்பி வருவது எப்போதும் மகிழ்ச்சியான விஷயம். அந்த ஒரு அனுபவத்தைத் தான் ‘நேசிப்பாயா’ படத்தில் பணிபுரிந்தபோது உணர்ந்தேன். எனது பாலிவுட் திட்டமான ‘ஷெர்ஷா’ படத்தை முடித்த பிறகு, என்னை உற்சாகப்படுத்திய ஒரு கதையை இயக்க விரும்பினேன். அந்த நேரத்தில் தான் ஆகாஷ் முரளியை சந்தித்தேன். கதையைப் பற்றி பேசியபோது இருவரும் இணைந்து பணிபுரிய முடிவு செய்தோம். படத்தை இறுதியாக பார்த்தபோது எங்களுக்கும் எங்கள் அணியினருக்கும் முழு திருப்தி இருந்தது. புதுமுக நடிகர் போல அல்லாமல் தேர்ந்த நடிகரைப் போல நடித்து எங்களை ஆச்சரியப்படுத்தினார்.

இயற்கையாகவே அவருக்கு அற்புதமாக நடிக்கும் திறன் இருக்கிறது. அதிதி ஷங்கர் பணிபுரிவதற்கு மிகவும் இலகுவானவர். நடிகர்கள் சரத்குமார், பிரபு, குஷ்பு சுந்தர், ராஜா, கல்கி கோச்லின், சிவ பண்டிட் மற்றும் பல சிறந்த நடிகர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு இதுதான் முதல் முறை. 90 சதவீத படப்பிடிப்பு ஸ்பெயின், போர்ச்சுகல் போன்ற வெளிநாடுகளில் நடந்துள்ளதால் இப்படம் திரையரங்குகளில் சினிமா ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்று நம்புகிறேன். எனது நெருங்கிய நண்பர் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை எப்போதும் எனது படங்களுக்கு பெரும் பலம். இந்த படத்தில் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. எனது பார்வையை அழகான காட்சிகளாக மொழிபெயர்த்த ஒளிப்பதிவாளர் கேமரூன் எரிக் பிரிசன் மற்றும் சண்டை பயிற்சி குழுவினருக்கு எனது சிறப்பு நன்றி. எனது தயாரிப்பாளர்கள் சேவியர் பிரிட்டோ மற்றும் சினேகா பிரிட்டோ ஆகியோருக்கு நன்றி. ’நேசிப்பயா’ படம் காதல், ஆக் ஷன் மற்றும் எல்லையற்ற பொழுதுபோக்கு கொண்ட விஷுவல் ட்ரீட்டாக இருக்கும்” என்றார்.

இந்தப் படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ், சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்க சினேகா பிரிட்டோ இணைந்து தயாரித்துள்ளார்.