சயின்ஸ் ஃபிக்ஷன் சப்ஜெக்டில் ஷிவ் மாதவ் இயக்கும் புதியபடம்
திரையுலகில் நுழையும்போதே புதுமையான முயற்சிகளுடன் அடியெடுத்து வைக்கும் வெகுசில படைப்பாளிகளில் ஒருவர் தான் இயக்குநர் ஷிவ் மாதவ். இவரது இயக்கத்தில் கடந்த 2023-ல் அறிவியல் கதையம்சத்துடன் வெளியான படம் ‘3.6.9’.
உலகளவில் வெறும் 81 நிமிடங்களில் எடுக்கப்பட்ட முதல் படம் என்ற சாதனையையும், தமிழ்நாட்டிலிருந்து இரண்டு உலக சாதனைகளைப் பெற்ற முதல் படமாகவும் இது அமைந்தது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீசான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றாலும், முறையான விளம்பரங்கள் இல்லாத காரணத்தினால் இப்படம் மக்களிடையே பெரிதும் சென்றடையாமல் போனது.
இந்த நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி என ஒவ்வொரு மொழியிலிருந்தும் மிகப்பெரிய நடிகர்களை வைத்து, ஒரு பிரம்மாண்டமான கமர்சியல் மற்றும் அறிவியல், பேண்டசி கலந்த சூப்பர் ஹீரோ படத்தை இயக்கத் தயாராகி வருகிறார் ஷிவ் மாதவ்.
இப்படத்தின் ப்ரீ-புரொடக்சன் பணிகள் மற்றும் மினியேச்சர் ஒர்க்குகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.