பொது மக்கள் ஏன் தியேட்டர்களில் படம் பார்க்க விரும்புவதில்லை? – உண்மைகளை உடைக்கும் தயாரிப்பாளர்!

Get real time updates directly on you device, subscribe now.

டைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்த் திரையுலகினரின் வேலை நிறுத்தத்தில் முக்கிய பேசு பொருள் ‘தியேட்டர்’!

‘தியேட்டர்காரர்கள் சரியானபடி கணக்கு கொடுப்பதில்லை, எங்கள் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள்’ என்பது தயாரிப்பாளர்களின் குற்றச்சாட்டு.

‘தியேட்டருக்கு நல்ல படங்கள் வருவதில்லை, கூட்டமும் வருவதில்லை, தியேட்டர் நடத்துவதற்குப் பதில் அந்த இடத்தில் வேறு ஏதாவது செய்தால் இதைவிட நல்ல லாபம் கிடைக்கும்’ என்பது தியேட்டர்காரர்களின் புலம்பல்.

இரண்டு பேர் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. பின்னே எங்கே தான் பிரச்சனை?

தியேட்டர்காரர்கள் சொல்லும் ‘நல்ல படம்’ என்பது அளவுக்கதிகமான படங்களின் வரவு மற்றும் டிஜிட்டல் கேமராவினால் எளிதான கைக்கூடல் இவற்றினால் விளைந்தவை. தற்சமயம் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இதற்குத் தீர்வு காண முயற்சி நடக்கிறது. பொருத்திருந்து பார்ப்போம்.

இனி தியேட்டருக்கு வருவோம்:

எல்லா தியேட்டர்களுக்கும் ஏன் கூட்டம் வருவதில்லை? எந்தப் படம் போட்டாலும் சில தியேட்டர்களுக்கு எப்படி கூட்டம் வருகிறது?

காரணம், தியேட்டரின் பராமரிப்பு மற்றும் தியேட்டரோடு சேர்ந்த இன்ன பிற வசதிகள். மால் தியேட்டர்களுக்குக் கூட்டம் வருவதற்கு காரணம், பர்ச்சேஸ் செய்து விட்டு, ஃபுட் கோர்ட்டில் சாப்பிட்டு விட்டு, குழந்தைகளை விளையாட விட்டு, மாலை சுற்றி வந்து வேடிக்கை பார்த்து விட்டு அதோடு சினிமா பார்க்கும் வாய்ப்பு இருப்பதால் தான்.

சரி, தனிக்கட்டையாக இருக்கும் சிங்கிள் தியேட்டர்களுக்குக் கூட்டம் வர என்ன செய்யலாம்? இதோ சில ஆலோசனைகள் :

* கண்டிப்பான முறையில் முகம் சுழிக்காத அளவு, பளபளவென்று இல்லாவிட்டாலும் பளிச்சென்று இருக்கும் வகையில் தியேட்டரின் உள்ளே, வெளியே மற்றும் சுற்றுப்புறம் ஆகியவற்றை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். எத்தனை தியேட்டர்கள் மூத்திர சந்துக்குள் நுழையும் எஃபெக்டோடு உள்ளன என்று எல்லோருக்கும் தெரியும். பராமரிக்காத தியேட்டருக்கு அதனைச் சார்ந்த சங்கம் அபராதம் விதிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் மிக நன்றாகப் பராமரிக்கப்படும் முதல் மூன்று தியேட்டர்களுக்கு வருடா வருடம் பரிசுகள் வழங்க வேண்டும். அதனையும் விழா வைத்துக் கொடுக்க வேண்டும்.

* எந்தப் படம் போட்டாலும் தியேட்டர் சார்பாக பிட் நோட்டீஸ் அச்சடித்து சுற்றுப் பகுதிக்கு விநியோகிக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் அனுப்பும் போஸ்டர்களை விரயம் செய்யாமல் ஒட்ட வேண்டும்.

* டிக்கெட் சம்பந்தமாக அடிக்கடி குலுக்கல் வைத்து படம் பார்க்க வருகிற ரசிகர்களுக்கு பரிசுகள் வழங்க வேண்டும். கணினி முன்பதிவு கட்டணம் கட்டுப்படியாகும் விலையில் இருக்க வேண்டும். உதாரணத்துக்கு பத்து ரூபாய்க்குள்.

* தரம் குறையாத பொருட்களுடன் கேண்டீன் இருக்க வேண்டும். விலையும் சரியானபடி இருக்க வேண்டும். ‘ரெண்டு சமோசா வாங்கினால் ஒரு டீ இலவசம்’, ‘ஐந்து டிக்கெட் ஒருவர் வாங்கினால் ஒரு பாப்கார்ன் இலவசம்’, ‘பைக்கில் வருபவருக்கு குலுக்கல் முறையில் பெட்ரோல் டோக்கன் வழங்குவது’, ‘தியேட்டரின் தரம் பற்றி உயர்வாக வாசகம் எழுதுபவருக்கு ஒரு டிக்கெட் இலவசம்’… இப்படி நிறைய தர வேண்டும்.

* ஒவ்வொரு தியேட்டரிலும் சிறுவர்கள் விளையாடுவதற்கென்றே ஒரு சிறிய பகுதியை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். டிக்கெட் வாங்கியவர்கள் தங்கள் குழந்தைகளுடன் இளைப்பார இடம் இருக்க வேண்டும். எந்தப் படம் போட்டாலும் பரவாயில்லை என்று குடும்பங்கள் ஆர்வமாகவும், சந்தோஷமாகவும் தியேட்டருக்கு வர விருப்பப்பட வேண்டும்.

* எந்தத் தியேட்டரிலும் மது அருந்திவிட்டு படம் பார்க்க அனுமதிக்கக் கூடாது. பான்பராக் தடை வேண்டும். இவை இரண்டும் எந்தப் படம் போட்டாலும் குடும்பங்களை வர விடாமல் தடுத்து விடும்.

* முன்பெல்லாம் மாட்டு வண்டியிலும், பின்பு ஆட்டோவிலும் தியேட்டர் பற்றியும், படம் பற்றியும் பிரச்சாரம் நடக்கும். அந்த முறையை இப்போதும் கொஞ்சம் நவீனமாக வாட்ஸ் அப், குறுந்தகவல் மூலம் அழைப்பது என மாற்றி ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைக்க முயற்சிக்கலாம்.

* இது போட்டி நிறைந்த உலகம். சினிமாவைத் தாண்டிய பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைய வந்து விட்டன. ஆனாலும் தியேட்டரில் படம் பார்ப்பது ஒரு வகையான சுகமான அனுபவம். அதை மூட்டைப் பூச்சி இல்லாத, உடைந்து ஆடாத, அழுக்காய் கப்படிக்காத நல்ல சேர்களில் அமர்ந்து பார்க்கும்படி செய்ய வேண்டும்.

* வேண்டா வெறுப்பாய் பிளீச்சிங் பௌடர் மட்டும் தூவி விட்டு எனக்கென்ன என்று விட்டுவிடாமல், நல்லவிதமாகப் பராமரிக்கப்பட்ட டாய்லெட் இருப்பது அவசியம். இப்படி செய்யப்படுகிற புது முயற்சிகள் கண்டிப்பாக தனியாக தியேட்டர்களை வைத்திருப்பவர்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.

மேற்சொன்ன விஷயங்களைக் கடைப்பிடிப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. லட்சங்களிலும், கோடிகளிலும் தியேட்டரை கட்ட முடிந்த நம்மால் அதை சில ஆயிரங்கள் செலவழித்து பராமரிப்பது முடியாத காரியமா என்ன?

முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை, முயன்று தான் பார்ப்போமே!

– கஸாலி