‘ஓ மை கடவுளே’ படத்தைப் பாராட்டிய மகேஷ் பாபு!
ஒட்டு மொத்த ‘ஓ மை கடவுளே’ படக்குழுவும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம், ஆந்திரப் படவுலகின் இளவரசனும் பலமான கட்டமைப்பு கொண்ட ரசிகர் படையைப் பெற்றிருப்பவருமான மகேஷ் பாபு, ‘ஓ மை கடவுளே’ படத்தின் புதுமையான கதையம்சத்தையும், உணர்ச்சிகரமான சுவை மிக்க காட்சியமைப்புகளையும் வெகுவாகப் பாராட்டியிருப்பதுதான்.
இது குறித்து ஆக்சஸ் பிலிம் பேக்டரியைச் சேர்ந்த படத்தயாரிப்பாளர் டில்லி பாபு கூறியதாவது…
“மகேஷ் பாபுவைப் போன்ற சூப்பர் ஸ்டார் ‘ஓ மை கடவுளே’ படத்தைப் பாராட்டியிருப்பதை உண்மையில் மிகப் பெரிய கெளரவமாகக் கருதுகிறோம். மகேஷ் பாபு, தான் பார்த்த படங்களின் சிறப்புகளை பட்டியலிட்டுப் பாராட்டும் இயல்பு வரவேற்கத் தக்கது. அவரது இந்தப் பாராட்டு எங்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் பாராட்டப்படுவது எனக்கு பெருமகிழ்ச்சியையும் மிகுந்த உற்சாகத்தையும் தந்திருக்கிறது. இதை நான் ஏற்கெனவே பல முறை குறிப்பிட்டிருந்தாலும் இப்படத்துக்கு முழு ஒத்துழைப்பைக் கொடுத்து முழுமையாக்கிய ஒட்டு மொத்த படக்குழுவினரும் இந்தப் பாராட்டுரைகளுக்கு தகுதியானவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்பதை இப்போதும் கூற கடமைப்பட்டிருக்கிறேன். படத்தின் வெற்றியும் இந்தப் பாராட்டுரைகளும் நல்ல கதையம்சமுள்ள மேலும் சிறந்த படங்களைத் தரவேண்டும் என்ற பொறுப்புணர்வை இன்னும் அதிகப்படுத்தியருக்கிறது. அபிநயா செல்வமும் அசோக் செல்வனும் மேலும் இது போன்ற நல்ல படங்களைத் தொடர்ந்து தர வேண்டும் என விரும்புகிறேன்” என்றார் டில்லிபாபு.
ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரித்த ‘ஓ மை கடவுளே’ படத்தை அஸ்வத் மாரிமுத்து எழுதி இயக்கியிருந்தார். நகைச்சுவை கலந்த காதல் சித்திரமாக உருவான இப்படத்தில் அசோக் செல்வன், ரித்விகா சிங் மற்றும் வாணி போஜன் பிரதான வேடங்களில் நடிக்க, விஜய் சேதுபதி முக்கியமானதொரு பாத்திரத்தில் நடித்திருந்தார். 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தின வார இறுதியில் வெளியான ‘ஒ மை கடவுளே’ படம் வணிக ரீதியில் பெருவெற்றி பெற்றதுடன், விமர்சன ரீதியில் நல்ல பாராட்டுதல்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.