பாலக்காட்டு மாதவன் – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

palakattu---review

பெற்றெடுத்த தாய், தந்தையை பாரம் என்று நினைத்து முதியோர் இல்லங்களில் சேர்த்து விட்டு தனிக்குடித்தனம் நடத்தும் இக்கால இளைஞர்களுக்கு படிப்பினை ஊட்டும் படமாக வந்திருக்கும் படம் தான் இந்த ‘பாலக்காட்டு மாதவன்’.

எந்தக் கஷ்டம் வந்தாலும் வேலைக்கே போகாமல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது தான் விவேக்கின் ஆசை. அதற்காக தன் மனைவி சோனியா அகர்வால் வேலை செய்யும் கம்பெனியில்  வேலையில் இருக்கும் விவேக் மனைவியை விட குறைந்த சம்பளம் என்பதை காரணம் காட்டி வேலையை விட்டு நின்று விடுகிறார்.

அதன்பிறகு உடம்பே நோகாதா வேலை எதாவது இருக்கிறதா? என்று தேடுபவருக்கு கார் டிரைவர், MLM என பல கம்பெனிகளில் ஏறி இறங்கி எந்த வேலையும் செட்டாகாமல் போகிறது.

இறுதியில் சிங்கமுத்து சொல்லும் யோசனையின்படி மாதம்தோறும் கிடைக்கும் 25,000 ரூபாய்க்காக முதியோர் இல்லத்தில் இருக்கும் ‘செம்மீன்’ ஷீலாவை தாயாக தத்தெடுக்கிறார்.

அதன்பிறகு நடப்பது என்ன? வேலையே செய்யாமல் சம்பாதிக்க நினைத்த விவேக் அடுத்த என்னவாகிறார்? என்பதே கிளைமாக்ஸ்.

கமர்ஷியல் படங்களில் நடித்து அடுத்தடுத்த படங்களில் தங்களது சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்று பேராசைப்படுகிற ஹீரோக்களுக்கு மத்தியில் சினிமா வழியாக ரசிகர்களுக்கு நல்ல சமுதாயக்கருத்தை சொல்ல வேண்டும் என்று நினைத்த விவேக் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்.

‘நான் தான் பாலா’ படத்தில் காமெடியே செய்யாமல் சீரியஸ் கேரக்டரில் வந்த விவேக் இதில் வழக்கமான காமெடி கேரக்டரில் கலக்கியிருக்கிறார். சோனியா அகர்வாலுடன் நெருக்கமான காட்சிகளில் கூட ரொமான்ஸுடன் காமெடியையும் வழிய விடுகிறார்.

உன் பேரென்ன என்று ஒரு பெண்ணிடம் விவேக் கேட்கவும் அந்தப் பெண் ‘காஜல் அகர்வால்’ என்று சொல்ல அதற்கு அதற்கு விவேக் தன் பெயரை அர்விந்த் கெஜ்ரிவால் என்று பதிலடி கொடுத்து பஞ்ச் அடிக்கும் போதும், வண்டியில் போகும் போது ‘டேய் 40ல போன 80 வரைக்கு இருப்போம், 80ல போன 40லயே போய்டுவோம்’ என்று பஞ்ச் அடிப்பதுமான விவேக்குக்கே உரிய ‘நறுக்’ காமெடிகளை படம் முழுக்க ரசித்துச் சிரிக்கலாம்.

இடைவேளைக்குப் பிறகு வருகிறார் நான் கடவுள் ராஜேந்திரன். எஸ்.பி.பி.சந்தோஷ்குமார் என்கிற பாடகராக வந்து அவர் அடிக்கும் கூத்துக்கு அளவே இல்லை. அவர் பாட ஆரம்பித்தாலே விவேக் தெறித்து ஓடுவதும் டி.எம்.எஸ் பாட்டை ராஜேந்திரன் பாடும் போது “டி.எம்.எஸ் ஏன் இவ்ளோ சீக்கிரம் செத்துப்போனார்னு இப்பத்தாண்டா தெரியுது’ என்று டைமிங்கில் டயலாக் அடிப்பதும் நல்ல கலகலப்பான காட்சிகள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இதில் ஹீரோயினாக நடித்திருக்கும் சோனியா அகர்வால் பொறுப்பான பெண்ணாக, குடும்பப்பாங்கான கேரக்டரில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

வளர்ப்புத் தாயாக வரும் செம்மீன் ஷீலா உணர்ச்சிகரமான காட்சிகளில் நெகிழ வைத்து இந்தக் கால இளைஞர்களை சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.

மனோபாலா, சிங்கமுத்து, இமான் அண்ணாச்சி, செல்முருகன், ஆர்த்தி, பாண்டு, டி.பி.கஜேந்திரன் என ஏகப்பட்ட நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் படம் முழுக்க காமெடியில் ஸ்கோர் செய்வது என்னவோ விவேக் தான்.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும், கே.எஸ்.செல்வராஜின் ஒளிப்பதிவும் பக்கா பலம்.

காமெடிக்கு காமெடி, சென்டிமெண்ட்டுக்கு சென்டிமெண்ட் கூடவே இக்கால இளைஞர்களை சிந்திக்க வைக்கும் நல்ல கருத்துகள் என எந்த ஆபாசமும் இல்லாத குடும்பத்தோடு பார்த்து ரசிக்கக் கூடிய வகையில் ஒரு நல்ல ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படமாக தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் எம்.சந்திரமோகன்.