விஷாலின் ‘பாயும் புலி’ படத்துக்கு ரெட்? : திரையரங்க உரிமையாளர்கள் அடாவடி!
‘லிங்கா’ படத்தில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு விஷாலின் பாயும்புலி படத்துக்கு ரெட் போடுவது தொழில்தர்மம் இல்லை என்று கொதித்தெழுந்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.
விஷால், காஜல் அகர்வால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கியுள்ள பாயும்புலி படம் வருகிற செப்டம்பர் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் திடீரென்று லிங்கா நஷ்டத்தை தராவிட்டால் பாயும்புலி படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம். அதோடு செங்கல்பட்டு, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட பல ஏரியாக்களில் விஷாலின் படத்துக்கு ரெட் போடப்பட்டிருக்கிறது.
தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் இந்த அடாவடிச் செயலை தயாரிப்பாளர் சங்கம் வன்மையாக கண்டித்திருக்கிறது.
இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
”’லிங்கா’ திரைப்படம் வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் வெளியிட்டதில் ஏற்பட்ட நஷ்ட ஈட்டுத் தொகையை வேந்தர் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பான ‘பாயும் புலி’ படத்தை வட ஆற்காடு, தென் ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் வெளியிட தடை விதித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் தன்னிச்சையாக அறிவித்துள்ளது. இது மிகவும் கண்டனத்திற்குரிய செயல் ஆகும்.
மேலும், இது தொடர்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு எந்தவித முன்னறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை. ‘லிங்கா’ வில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு ‘பாயும் புலி’க்கு தடைவிதிப்பது எந்தவிதத்திலும் தொழில் தர்மம் அல்ல.
எனவே, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் உடனடியாக ‘பாயும் புலி’ திரைப்படத்தின் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும், அப்படி தடையை நீக்காத பட்சத்தில் ஜனநாயக முறைப்படி தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு இப்பிரச்சினை தொடர்பாக தெரிவித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.