படம் ரெடியானதும் சொல்லுங்க… கண்டிப்பா பார்க்கணும் : ஏ.ஆர்.ரஹ்மானை வியக்க வைத்த டீஸர்!
‘மறுபடியும் ஒரு காதல்’ என்ற பெயரில் வித்தியாசமான காதல் கதையை இயக்கிய வாசுதேவ் பாஸ்கர் மீண்டும் ஒரு வித்தியாசமான காதல் கதையோடு களமிறங்கியிருக்கிறார்.
‘சேது’, ‘காதல்’ போன்ற வெற்றிப்படங்களில் வரிசையில் சேரக்கூடிய அளவுக்கு வித்தியாசமான கோணத்தில் தயாராகியிருக்கும் அந்தப்படம் ‘பள்ளிப்பருவத்திலே’.
டைட்டிலுக்கு ஏற்றாற் போல் பள்ளிப் பருவத்தில் அரும்பும் காதலைச் சொல்ல வேண்டும் என்றால் ஹீரோவும் அந்த டைப்பில் இருந்தால் தானே சிறப்பு.
இயக்குநர் வாசுதேவ் பாஸ்கரின் தேடலுக்கு நூறு சதவீதம் பெர்பெக்ட் ஹீரோவாக கிடைத்திருக்கிறார் நந்தன் ராம்.
இவர் வேறு யாருமல்ல… ‘நாட்டாமை’, ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘மேட்டுக்குடி’, ‘கோகுலம்’ போன்ற 100க்கும் மேற்பட்ட ( இதில் பல படங்கள் பம்பர் ஹிட்! ) படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்த பிரபல இசையமைத்த சிற்பியின் மகன் தான்.
அப்பா என்னை ஒரு இசையமைப்பாளராக்க ஆசைப்பட்டார். ஆனால் எனக்கு சின்ன வயசுல இருந்தே நடிகனாகத் தான் ஆசை, விஷயத்தை அப்பாக்கிட்ட சொன்னேன். மறுப்பு சொல்லாமல் நடிப்பு, டான்ஸ், நடனம்னு அதற்கான பயிற்சிகளைக் கொடுத்தார். ஒரு நல்ல கதையில ஹீரோவாக அறிமுகமாகனும்னு காத்துக்கிட்டிருந்த எனக்கு எதிர்பார்த்ததை விட அதிக பொருட்செலவில் தயாராகும் இந்தப்பட வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா, ஊர்வசி, பொன் வண்ணன்னு மூத்தவர்களுடன் இணைந்து நடித்தது என்னோட பாக்கியம் என்றார்.
படத்தில் நந்தன் ராமுக்கு ஜோடியாக ‘காதல் கசக்குதய்யா’ படத்தில் குறும்புப் பெண்ணாக வந்த வெண்பாவை ஜோடியாக்கியிருக்கிறார்கள். ‘காதல் கசக்குதய்யா’ படத்திலும் ஒரு பள்ளிக்கூட பெண்ணாகத்தான் வருவேன், ஆனால் அந்தப் படத்துல நான் பேசிக்கிட்டே இருப்பேன், இதுல பேசவே மாட்டேன். நடிப்புக்கு நல்ல ஸ்கோப் இருக்கிற கேரக்டர். கண்டிப்பாக முந்தின படத்தை விட இதுல ரொம்ப வித்தியாசம் தெரியும் என்றார்.
டைட்டிலுக்கு ஏற்றாற்போல் படத்தில் பால்ய வயதில் அரும்பும் காதலை மட்டும் சொல்லாமல் ஒரு தந்தை தன்னால் ஆக முடியாத கனவை மகன் மீது திணிப்பது சரியா என்கிற பார்வையையும் இதுவரை யாரும் சொல்லாத கோணத்தில் சொல்லியிருக்கிறாராம் இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர். அதோடு இந்தப் படத்தை தான் படித்த பள்ளியிலே மலரும் நினைவுகளோடு, தனது பழைய நண்பர்களையெல்லாம் ஒன்றிணைத்து படமாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து ரிலீசுக்கு தயாராகியிருக்கும் படக்குழு வெற்றி உறுதி என்கிற நம்பிக்கையோடு ரிலீஸ் வேலைகளில் மும்முரமாகியிக்கிறார்கள்.
அதற்கு காரணம் படத்துக்கு கிடைத்த தமிழ்சினிமாவின் இரண்டு முக்கியமான பிரபலங்களின் பாராட்டுகள் தான்.
படத்தை பாரதிராஜா சார்கிட்ட போட்டுக் காண்பித்தோம், பார்த்து விட்டு வெளியே வந்தவர் யோவ் நான் எடுத்த அலைகள் ஓய்வதில்லை படத்தை ஞாபகப்படுத்திட்டிய்யா… என்று மனம் திறந்து பாராட்டினாராம்.
அடுத்த பாராட்டு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து வந்தது…
”படத்தோட ஆடியோ போஸ்டரை வெளியிட்ட இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானிடம் படத்தின் டீஸரையும் போட்டுக் காண்பித்திருக்கிறது படக்குழு. டீஸரைப் பார்த்து ரசித்த ஏ.ஆர்.ரஹ்மான் இது என்னோட பள்ளிப்பருவ விஷயங்களை ஞாபகப்படுத்துகிறது என்று சொல்லி வியந்து பாராட்டியதோடு படம் ரெடியானதும் சொல்லுங்க; கண்டிப்பா பார்க்கணும்… என்றாராம்.
இது போதுமே ஹிட்டு கன்பார்ம் தான்!