பள்ளி மாணவர்களின் காதல், காமெடி கலாட்டாவாக வரும் ”பள்ளிப்பருவத்திலே”

Get real time updates directly on you device, subscribe now.

 

palli-paruvathile

வி.கே.பி.டி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக D.வேலு தயாரிக்கும் படம் ‘பள்ளிப்பருவத்திலே’.

இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக வெண்பா நடிக்கிறார். இவர் கற்றது தமிழ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். முக்கிய கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிகுமார், ஊர்வசி நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார். மற்றும் தம்பி ராமய்யா, கஞ்சா கருப்பு இருவரும் கலகலப்பான காமெடி வேடத்தில் நடிக்கிறார்கள். பொன்வண்ணன், பேராசிரியர் ஞானசம்மந்தம், பருத்திவீரன் சுஜாதா, வேல்முருகன், பூவிதா, E.ராம்தாஸ், புவனா, வைஷாலி, காதல் சிவகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – வினோத்குமார், இசை – விஜய்நாராயணன், பாடல்கள் – வைரமுத்து, வாசு கோகிலா, எம்.ஜி.சாரதா, தயாரிப்பு – D.வேலு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – வாசுதேவ் பாஸ்கர்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது ”கலகலப்பான குடும்ப சூழலையும், பள்ளி மாணவர்களையும் மையப்படுத்தி அமைக்கப்பட்ட காமெடி கலந்த, காதல் கதை தான் பள்ளி பருவத்திலே. படத்தின் படப்பிடிப்பு ஐம்பது நாட்கள் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஓரத்த நாடு, ஆம்பலாபட்டு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நடைபெற்று முடிவடைந்தது. இந்த ஐம்பது நாள் படப்பிடிப்பில் எங்கள் யாருக்கும் எந்தவித சோர்வும் இருந்ததில்லை. காரணம் நாங்கள் அனைவரும் ஒரு குடும்பம் போல அந்த கிராம மக்களுடன் பழகினோம். படத்திற்காக காமெடியாக மட்டும் இல்லாமல் கே.எஸ்.ரவிகுமார் ஊர்வசி, தம்பி ராமைய்யா, கஞ்சா கருப்பு உட்பட எல்லா நடிகர்களும் படப்பிடிப்பு தளத்தை சுற்றி எங்களையும் ஊர் மக்களையும் சிரிக்க வைத்து சந்தோஷப்படுத்தினார்கள்.

சினிமா மேல் எனக்கு இருந்த காதலால் நான் உதவி இயக்குனராக வேலை செய்ய கே.எஸ்ரவிகுமார், சுரேஷ்கிருஷ்ணா அவர்களிடம் சேர வேண்டும் என்று பல முறை முயற்சித்தும் முடியாமல் போனது. ஆனால் நான் தயாரித்த ‘வேதா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் மூலம் எனக்கு அறிமுகம் கிடைத்தது. நான் யாரிடம் உதவியாளராக சேர வேண்டும் என்று நினைத்தேனோ அதே கே.எஸ்.ரவிகுமார் சாரை எனது இயக்கத்தில் இந்த படத்தில் நடிக்க வைத்தது எனக்கு கிடைத்த பாக்கியமாக நான் கருதுகிறேன்.

அவரிடம் நான் கதை சொன்னதும், முழுக்கதையையும் கேட்டு விட்டு. இது என்ன விருதுக்காக எடுக்கிற படமா? என்று கேட்டார். அப்போது இதே வார்த்தையை தான் கவிப்பேரரசு வைரமுத்துவும் என்னிடம் சொன்னார் என்று கே.எஸ்.ரவிகுமார் சாரிடம் கூறினேன். அதற்கு அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். இவர்கள் இருவரும் சொன்னதே எனக்கு தேசிய விருது கிடைத்த சந்தோஷம் என்று இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர் கூறினார்.