பண்டிகை – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

PANDIGAI-REVIEW

RATING : 3.5/5

சென்னை போன்ற மெகா சைஸ் மெட்ரோ சிட்டிக்குள் நாம் அதிகம் பார்த்திராத, ஏன் புழங்கியும் இராத ”ஸ்டிரீட் பைட்” எனச் சொல்லப்படும் இல்லீகல் தெருச் சண்டையின் எக்ஸ்ட்ரீம் லெவலின் கம்ப்ளீட் பிக்சர்  தான் இந்த ‘பண்டிகை’.

திர்த்து அடித்தால் தான் இங்கே எல்லாம் கிடைக்கும் என்கிற எண்ணத்தோடு சிறு வயதிலிருந்தே வளர்கிற ஹீரோ கிருஷ்ணா நெருங்கிய சொந்தங்கள் இருந்தும் அனாதை.

இருந்தாலும் அடிதடிகளை எல்லாம் விட்டு விட்டு, வெளிநாட்டில் போய் செட்டிலாகும் கனவில் இருக்கும் அவர் தனது நண்பன் ப்ளாக் பாண்டியுடன் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்க்கிறார். கூடவே ஹீரோயின் ஆனந்தியைப் பார்த்ததும் காதல்!

என்ன செய்வது? சம்பாதிக்கிற அஞ்சு, பத்து காசு கைச்செலவுக்கே சரியாகப் போய் விட, காதலி ஆனந்தியை தொடர்பு கொள்ள ஒரு போன் தேவை. அதற்காக 10 ஆயிரம் ரூபாய் கிடைத்தால் சந்தோஷம். ஆனால் கிடைக்க வேண்டுமே? யோசித்துக் கொண்டிருக்கும் போதுதான் கிரிக்கெட் உள்ளிட்ட சூதாட்டங்களில் சொந்த வீடு, சொத்து பத்து அத்தனையையும் இழந்து நிற்கும் ‘பருத்தி வீரன்’ சரவணனின் அறிமுகம் கிடைக்கிறது.

இருவருக்குமே பணத்தேவை என்பதால் பார் ஒன்றில் கிருஷ்ணாவின் ஆக்‌ஷனைப் பார்த்ததும் ஆச்சரியப்படும் சரவணன் சிட்டிக்குள் கவர்மெண்ட்டுக்கு தெரியாமல் இல்லீகலாக நடக்கும் ஸ்டீரீட் பைட் என்று சொல்லப்படுகின்ற அதுதான் டென் ஸ்போர்ட்ஸ் சேனலில் பார்ப்போமே அது மாதியான ரெஸ்ட்லிங் சண்டையில் கிருஷ்ணாவை இறக்கி விட்டு அவருக்கும், தனக்கும் தேவையான பணத்தை சம்பாதிக்க முயற்சிக்கிறார்.

அவர்களின் பணத் தேடலுக்கான பலன் கிடைத்ததா? இல்லையா? என்பதே மிச்ச சொச்சம்.

எப்பேர்ப்பட்ட ஆகச் சிறந்த கதையாக இருந்தாலும் சில ஹீரோக்களை அந்தக் கதைகளோடு பொருத்திப் பார்ப்பது அரிதிலும் அரிது. ஆனால் இந்தக் கதையில் நூறு சதவீதம் மிகச்சரியாக பொருந்திப் போயிருக்கிறார் கிருஷ்ணா. கூட்டியும் இல்லாமல், குறைச்சலும் இல்லாமல் சரியான அளவில் வெயிட் போட்ட ஜிம் உடம்புடன் பெர்பெக்ட் பிட்டாக வருகிறார் கிருஷ்ணா. குத்துச் சண்டைகளில் ரத்தம் தெறிக்க தெறிக்க முகத்தில் அவர் காட்டுகிற ஆக்ரோஷமான எக்ஸ்பிரஷன்கள் மாஸ் ஹீரோக்களின் மெனக்கிடலுக்கு கொஞ்சமும் சளைத்ததில்லை!

காமெடி வருகிறதோ இல்லையோ? ஆனால் கிருஷ்ணாவுக்கு ஆக்‌ஷன் நன்றாகவே வருகிறது. அடுத்தடுத்த படங்களிலும் இதேபோல அடக்கி வாசித்தால் இன்னும் சில ஆண்டுகள் கோலிவுட்டில் பெரிய அளவுக்கு ரவுண்டு வரலாம்.

Related Posts
1 of 3

கதை முழுக்க முழுக்க தெருச் சண்டையையே சுற்றியே ட்ராவல் ஆவதால் நாயகியாக வரும் ஆனந்தியின் கேரக்டரில் சொல்லிக் கொள்ளும்படி விசேஷமில்லை. ஆனாலும் கிருஷ்ணாவுடனான அவருடைய லவ் எபிசோட் ஒரு அளவான அழகான கவிதையாக ரசிக்க முடிகிறது.

வில்லன் வீட்டில் கொள்ளையடிக்கப் போகிற போது திடீரென்று எண்ட்ரி கொடுக்கும் ஆனந்தி சூழ்நிலை புரியாமல் ஃசெல்பி எடுக்கிற காட்சி அந்த இடத்தில் எந்த திருப்பத்தையும் தராமல் போனாலும் சில நிமிடங்கள் படம் பார்க்கிற ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்து விடுவது டைரக்டரின் புத்திசாலித்தனம்.

போன தடவை விட்டதை இந்த தடவையாவது எடுத்து விட மாட்டோமா? என்று சொந்த வீடு, கடை என எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக இழந்து விட்டு கையறு நிலையில் நிற்கிற போது அவருக்கு ஒரு அதிர்ஷ்டம் அடித்து விடக் கூடாதா? என்று பார்ப்பவர்களையே பரிதாபப்பட வைத்து விடுகிறார் பருத்தி வீரன் சரவணன். ஆழமான கேரக்டரில் தனது அழுத்தமான நடிப்பால் கவனிக்க வைத்திருக்கிறார் மனுஷன்.

திருடுவதில் முன்பின் அனுபவமில்லை, ஆனாலும் உடல் தெம்பை மட்டுமே வைத்துக் கொண்டு வில்லன் வீட்டில் கொள்ளையடிக்கப் போகும் கிருஷ்ணா எப்படியாவது அந்தக் கும்பலிடமிருந்து தப்பித்து வந்து விட மாட்டாரா? என்று எங்கேயுமே திரும்ப விடாமல் படத்தோடு ஒன்றிப் போக வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பெரோஸ்.

இதுவரை நடித்திராத வித்தியாசமான கேரக்டரில் வருகிறார் நிதின் சத்யா. மதுசூதனன், கருணாஸ், அருள்தாஸ், பிளாக் பாண்டி, சண்முக ராஜன் என படத்தில் வருகிற அத்தனை கேரக்டர்களும் கச்சிதம் காட்டியிருக்கிறார்கள்.

ஆர்.ஹெச் விக்ரமின் பின்னணி இசையில் ஒரு ஆக்‌ஷன் படத்துக்குரிய எபெக்ட்களுடன் விறுவிறுப்புக்கு துணை நிற்கின்றன. அர்வியின் ஒளிப்பதிவில் ஒரு தெருச்சண்டையை ரெஸ்ட்லிங் மாதிரி பிரம்மாண்டப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இரவு நேரக்காட்சிகள் அதிஅற்புதம்.

காதலியிடம் பேச வேண்டும் என்றால் அதற்கு பத்தாயிரம் ரூபாய் போன் வாங்கித்தான் ஆனந்தியிடம் கிருஷ்ணா பேச வேண்டுமா என்ன? அடுத்து என்ன அடுத்து என்னவென்று பரபரப்பாகப் போகும் காட்சிகளை இடைமறிப்பது போல வருகிற பாடல்களை யோசிக்காமல் வெட்டியெறிந்திருக்கலாம்.

இப்படி சின்னச் சின்னதாய் சில குறைகள் தென் பட்டாலும் இடைவேளை வரையிலான கதை ஒரு தளத்திலும், இடைவேளைக்குப் பிறகான கதை இன்னொரு தளத்திலும் குழப்பிமில்லாத திரைக்கதையாக பயணிக்கிறது. தமிழ்சினிமா இதுவரை பார்த்திராத புதிய களத்தில் முழுமையான ஆக்‌ஷன் படமாகத் தந்து முதல் அறிமுகப்படமே அழுத்தமான படமாக அடையாளம் காட்டும் விதத்தில் இயக்கி செலிபிரேஷன் டைரக்டராக ஸ்கோர் செய்திருக்கிறார் பெரோஸ்.

கொண்டாடித் தீர்க்க வேண்டிய ”பண்டிகை”!