விழித்திரு – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

Vizhithiru

RATING – 2.5/5

நட்சத்திரங்கள் : கிருஷ்ணா, விதார்த், தன்ஷிகா, தம்பி ராமையா, வெங்கட் பிரபு, ராகுல் பாஸ்கரன், எரிக்கா பெர்ணாண்டஸ், பேபி சாரா மற்றும் பலர்

இயக்கம் : மீரா கதிரவன்

சென்சார் சர்ட்டிபிகேட் : ‘U’

வகை : ஆக்‌ஷன், த்ரில்லர், நாடகம்

கால அளவு : 2 மணி நேரம் 7 நிமிடங்கள்

‘அவள் பெயர் தமிழரசி’ படத்தைத் தொடர்ந்து மீரா கதிரவனின் இயக்கத்தில் வந்திருக்கும் இரண்டாவது படம் தான் இந்த ‘விழித்திரு.’ படத்தின் டைட்டிலுக்கு கீழேயே ‘ஓர் இரவு நான்கு கதைகள்’ என்று கேப்சன் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் ஒரே இரவில் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களின் வாழ்க்கையில் நடக்கிற நான்கு வெவ்வேறு சம்பவங்களின் தொகுப்பு தான் இந்தப்படம்.

வெளிநாட்டு வேலைக்காக சென்னையில் இருக்கும் ஏஜென்ஸி ஒன்றை நம்பி வந்து ஏமாந்து போகும் கிருஷ்ணா மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பிச் செல்ல முடிவெடுக்கிறார். போகிற வழியில் தனது மணி பர்சை தொலைத்து விட பணத்தேவைக்காக தற்காலிகமாக ஒரு டிராவல்ஸ் கம்பெனியில் ஆக்டிங் டிரைவர் வேலைக்கு சேர்கிறார். அவர் ஓட்டும் காருக்குள் வரும் துப்பாக்கி குண்டடி பட்டு வரும் பத்திரிகை நிருபரான எஸ்.பி.பி சரண் அங்கேயே இறந்து விடுகிறார்.

எஸ்.பி.பி சரணிடம் தங்களுக்கு எதிராக இருக்கும் ஒரு முக்கியமான வீடியோ ஆதாரத்தை எடுப்பதற்காக கிருஷ்ணாவின் காரை துரத்துகிறது அமைச்சரின் கைக்கூலிகள். அதோடு ஐ விட்னஸ் ஆக இருக்கும் அவரையும் கொலை செய்ய முயற்சிக்கிறது. அவர்களிடமிருந்து கிருஷ்ணா தப்பித்தாரா? இல்லையா? என்பது ஒரு கதை.

வீடு புகுந்து திருடும் வேலையைச் செய்து வரும் விதார்த் ஒரு பெரிய வீட்டுக்குள் திருடச் செல்கிறார். அங்கு தம்பி ராமையாவால் புதுப்பெண் போல அலங்கரிக்கப்பட்டு அடைக்கப்பட்டிருக்கும் தன்ஷிகாவை காப்பாற்றுகிறார். அவரை காப்பாற்றி கூப்பிட்டு வெளியே வந்த பிறகு தான் தன்ஷிகாவே ஒரு திருடி என்கிற உண்மை விதார்த்துக்கு தெரிய வர அவர்களின் வாழ்க்கையில் அடுத்தடுத்து என்ன நடக்கிறது? என்பது இன்னொரு கதை.

கண்பார்வையற்றவர் வெங்கட் பிரபு. அவருடைய மகள் பேபி சாரா தான் செல்லமாக வளர்த்த நாய்க்குட்டி ஒன்றை தொலைத்து விடுகிறார். அதைத் தேடுவதற்காக அப்பாவுடன் வெளியே செல்லும் அவரை கூலிப்படையைச் சேர்ந்த சிலர் கடத்தி விற்க முயற்சிக்கிறார்கள். அவர்களிடமிருந்து எப்படி தனது மகளை வெங்கட்பிரபு காப்பாற்றுகிறார்? என்பது இன்னொரு மூன்றாவது கதை.

நான்காவது கதையாக பிரபல தொழிலதிபரின் மகனான புதுமுக ராகுல் பாஸ்கரன் மாடர்ன் கேர்ள் ஆன எரிக்கா பெர்ணாண்டஸுடன் ஓர் இரவை கழித்து விட நினைக்கிறார். அதற்காக அவர் பின்னாலேயே சுற்றுகிறார். இருவரும் பாண்டிச்சேரியிலிருந்து சென்னைக்கு காரில் செல்வோம். அந்த பயணத்தில் உன்னை எனக்குப் பிடித்து விட்டால் நீ கேட்டபடி நான் சம்மதிக்கிறேன் என்கிறார் எரிக்கா. ராகுலின் அந்த உயரிய நோக்கம் நிறைவேறியதா? இல்லையா? என்பது இன்னொரு கதை.

Related Posts
1 of 44

இப்படி நான்கு சம்பவங்களை நான்கு கதைகளாக்கி ஒரே இரவில் நடப்பது போலவும், ஒவ்வொரு கதையில் வரும் கேரக்டர்கள் எல்லாமே கிளைமாக்ஸில் ஒரே நேர் கோட்டில் வந்து நிற்பது போலவும் எந்த குழப்பமும் இல்லாமல் படமாக்கித் தந்திருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன்.

படத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் மொத்தக் கதையுமே மெயின் ஹீரோவாக வரும் கிருஷ்ணா மீதே பயணப்படுகிறது. கிருஷ்ணாவும் வழக்கமாக நடிப்பு என்ற பெயரில் ஓவர் ஆக்டிங் செய்து கடுப்பேற்றாமல் கேரக்டருக்கு என்ன தேவையோ அதை மட்டும் முழுமையாக வழங்கியிருக்கிறார். குறிப்பாக கொலை வெறியோடு அவரைத் துரத்தும் அமைச்சரின் கைக்கூலிகளிடமிருந்து அப்பாவியான அவர் எப்படியாவது தப்பித்து விட மாட்டாரா? என்று படம் பார்ப்பவர்களை ஏங்க வைத்து விடுகிறார்.

இன்னொரு ஹீரோ விதார்த், இரண்டு நாயகிகளில் ஒருவராக வரும் தன்ஷிகா இருவரின் காம்பினேஷன் ஒரு வித்தியாசமானதாக கவர்கிறது. பொதுவாக இது போன்ற கதையில் கிளைமாக்சின் ஹீரோ – ஹீரோயின் இருவருமே காதலிப்பது போல காட்டப்படும். ஆனால் இதில் நீ உன் வேலையை பார்த்துக் கொண்டு போ, நான் என் வேலையைப் பார்த்துக் கொண்டு போகிறேன் என்று பிரிந்து செல்வது துணிச்சலான திரைக்கதை அம்சம்.

டி.ஆர் பாட்டுக்கு தன்ஷிகா விசிலடித்து ஆடுவதைப் பார்க்கும் போது படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தன்ஷிகாவை டி.ஆர் நோகடித்த விஷயம் தான் ஞாபகத்தில் வந்து போகிறது. இந்தப் பொண்ணையா சார் நோகடிச்சீங்க?

முதியவராக சில காட்சிகளே வந்தாலும் வந்த காட்சிகளில் எல்லாம் சிரிக்க வைக்கிறார் தம்பி ராமையா.

பார்ட்டி, கேர்ள் ப்ரெண்ட் என நிஜ வாழ்க்கையில் மாடர்ன் வாழ்க்கை வாழ்ந்து வரும் இயக்குநர் வெங்கட்பிரபுவை இதில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி கேரக்டரில் பார்ப்பதே நமக்கு சர்ப்ரைஸ் தான். நான்கு கதைகளில் மகளோடு அவரும் சேர்ந்து நாய்க்குட்டியைத் தேடும் அந்த கதை மட்டும் தேவையில்லாத திணிப்போ என்கிற எண்ணமும் வராமல் இல்லை. காரணம் அது ஈர்ப்புக்கான மெட்டீரியல் இல்லை.

தொழிலதிபர் மகன் ராகுல் மற்றும் இன்னொரு மாடர்ன் கேர்ள் ஆக வரும் எரிக்கா பெர்ணாண்டஸ் இருவரது காம்பினேஷனும் சமகால பணக்கார வீட்டுப் பிள்ளைகளின் மனநிலையை அப்படியே எடுத்துக் காட்டுகிறது. முருங்கைக்காய் சைசில் இருந்தாலும் நீச்சல் குளத்தில் கவர்ச்சியாக நடந்து வரும் அந்த ஒரே ஒரு ஒய்யார நடையில் ரசிகர்களை கிறங்க வைத்து விடுகிறார்.

ஒரே ஒரு பாட்டுக்கு வந்தாலும் குத்தாட்டத்தில் தியேட்டரையே விசில் சத்தத்தில் அலற விடுகிறார் டி.ஆர்.

சத்யம் மகாலிங்கத்தின் இசையில் டி.ஆர் ஆடுகிற அந்தப் பாடல் மட்டும் கேட்கும் ரகம். இரவு நேரக் காட்சிகளுக்கான பின்னணி இசையில் ‘அடடே…’ போட வைத்திருக்கிறார்.

ஒரு த்ரில்லர் படத்துக்குரிய பரபரப்பை கிளைமாக்ஸ் வரை நம்மை சீட்டோடு உட்கார வைத்து விடுகிறது விஜய் மில்டன் – ஆர். வி சரண் ஆகியோரின் இரவு நேர இயல்பான ஒளிப்பதிவு.

நாம் ஒருவருக்கு நன்மையோ தீமையோ செய்யாத வரை அவர் நமக்கு அந்நியமானவர் தான். செய்து விட்டால் அவரும் நமக்கு நெருக்கமானவராகி விடுகிறார் என்கிற கருத்தைத் தான் நான்கு கதைகளின் சொல்ல நினைத்திருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன்.  ஒரு படத்தில் ஒரு கதையை குழப்பமில்லாமல் சொல்வதற்கே படாத பாடுபடும் இயக்குநர்களுக்கு மத்தியில் மீரா கதிரவனின் இந்த ஒரே இரவில் நான்கு கதைகள் சொல்லும் முயற்சியும், அதற்காக அவர் போட்டிருக்கும் உழைப்பும் நிச்சயம் பாராட்டுக்குரியது. அதில் எந்த வித சமரசமோ, குழப்பமோ இல்லாமல் ஒரு த்ரில்லரான இரவு நேரப் பயண அனுபவத்தை சுவாரஷ்யம் குறையாமல் தந்திருக்கிறார்.

விழித்திரு – மிஸ் பண்ணாமல் பார்த்திரு