ஆசைப்பட்டது டைரக்ஷன், கெடைச்சது ஹீரோ சான்ஸ்! : சிலிர்க்கும் ஸ்ரீதர் மாஸ்டர்
”எனக்கு படம் டைரக்ஷன் பண்ணனும்னு ரொம்ப நாளா ஆசை இருந்துச்சு. டான்ஸ்ல பிஸியா இருந்ததால் அந்தப்பக்கம் டக்குன்னு இறங்க முடியல. ஒருநாள் பிரபுதேவா மாஸ்டர், லாரன்ஸ் மாஸ்டர் இவங்கெல்லாம் ஹீரோவாகுறப்போ நீங்க ஆகக்கூடாதா?”ன்னு என்கிட்ட கேட்டார் இயக்குநர் ராகவ் மாதேஷ், சரி நடிச்சுப் பார்ப்போம்னு இறங்கிட்டேன்” என்று சிலிர்க்கும் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் ‘போக்கிரி மன்னன்’ பட ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
‘நாக்கமுக்க’ பாடல் மூலம் பிரபலமடைந்த ஸ்ரீதர் ஜில்லா, தூப்பாக்கி, தலைவா, எங்கேயும் காதல், வெடி, ஹாலிடே (ஹிந்தி), ராஜ்குமார் (ஹிந்தி), பைசா (தெலுங்கு) உட்பட விரைவில் வரவிருக்கும் விஜய்யின் ‘புலி’ உட்பட சுமார் 300 படங்களுக்கும் மேல் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்திருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ்.எஸ் பிக்சர்ஸ் சார்பில் தணிகைவேல் தயாரித்திருக்கும் இப்படத்தில் ஸ்ரீதர் மாஸ்டருக்கு ஜோடி ஸ்பூர்த்தி. பெங்களூரு வரவான இவருக்கும் இது முதல் படம்.
”பொதுவாகவே டான்ஸ் மாஸ்டர்கள் எல்லாரும் ரொம்ப பந்தா காட்டுவாங்க, கஷ்டமான ஸ்டெப்ஸை எல்லாம் கொடுத்து கஷ்டப்படுத்துவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஹீரோ ஸ்ரீதர் மாஸ்டர்ன்னு சொன்னவுடனே பயங்கர உதறல். எங்க நம்மளை திட்டித் தீர்ப்பாரோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன். முதல்நாள் ஷூட்டிங்ல நெறைய தடவை டேக் வாங்கினேன். என்னோட நடுக்கத்தைப் பார்த்த மாஸ்டர் பயப்படாமப் பண்ணுங்கன்னு என்கரேஜ் பண்ணினார்.
அதுக்கப்புறம் தான் எனக்கு தைரியமே வந்துச்சு. படம் முழுக்க அவர் கொடுத்த ஊக்கம். அவரோட டான்ஸ் மூவ்மெண்ட் எல்லாத்தையும் எந்த சங்கடமும் இல்லாம பண்ண முடிஞ்சது” என்றார் ஹீரோயின் ஸ்பூர்த்தி.
விஜய்யோட போக்கிரி, ரஜினியின் மன்னன் இரண்டு சூப்பர் ஸ்டார்களின் படங்களோட பெயரை படத்தோட டைட்டிலா வெச்சதுக்கு கதைக்கு ரொம்பப் பொருத்தமா அமைந்திருக்கிறதாம்.இடைவேளை வரைக்கும் போக்கிரியா இருக்கிற ஹீரோ இடைவேளைக்குப் பிறகு மன்னன் ஆகிறார். அதாவது ஒரு பொறுப்புள்ள ஹீரோவாகிறார்.
கமர்ஷியல் படத்துக்குரிய எல்லா விஷயங்களும் படத்துல இருந்தாலும், குடியால இந்த சமூகம் எந்தளவுக்கு சீரழிஞ்சுக் கெடக்குங்கிறதைத் தான் படத்தோட முக்கியமான மேட்டர்.
இன்றைய தமிழ்நாட்டோட சூழலுக்கு ரொம்ப முக்கியமான படம் தான்!