ராஜாவுக்கு செக்- விமர்சனம்

RATING : 3/5
எதுனா பிரயோசனமா பண்ணணும் என்று பிக்பாஸில் இருந்து வெளிவந்த சேரன் நடித்துள்ள படம் ராஜாவுக்கு செக். ஆக்ஷுவலா அவர் அதற்கு முன்பாகவே இப்படத்தில் நடித்திருக்க கூடும். அவர் நடிப்பைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை..வழக்கம் போல மிகையான நடிப்பை வாரி வழங்கி இருக்கிறார்.
அன்பான மகளை காப்பாற்றப் போராடும் அப்பாவின் கதை தான் இது. கூடவே கணக்கு வழக்கு இல்லாமல் தூங்கும் ஒரு வியாதி சேரனுக்கு இருக்கிறது என்ற புது விசயத்தையும் சேர்த்திருக்கிறார்கள். தொழில்நுட்பத்தால் தான் இவ்வளவு அலைக்கழிவும் என்று சொல்லிக்கொண்டே படத்தில் தொழில்நுட்பத்தால் வில்லன் டீமை நெருங்குவது நகை முரண்.
படத்தில் நடித்துள்ள ஏனையவர் யாரையும் பெரிதாக குறை சொல்ல முடியாது. வில்லன்கள் எனப்படும் அந்த நான்கு இளைஞர்களுக்கு இன்னும் ட்ரைனிங் கொடுத்திருக்கலாம்.
பின்னணி இசையும் பெரிதாக சோபிக்கவில்லை. புத்திசாலித்தனமான திரைக்கதை பெரிய ஆறுதல். அது தயாரிப்பாளருக்கும் பெரிய ஆறுதலாக இருக்கும். ஏன் என்றால் ஒரே இரவிலும், ரெண்டு மூன்று லொக்கேசனிலுமே எடுக்கப்பட்ட படம் இது.
இடைவேளைக்குப் பிறகு பல காட்சிகள் திருப்பம் நிறைந்தவை. இரவுக்காட்சிகள் அதிகம் என்பதால் ஒளிப்பதிவாளர் அசத்தி இருக்கிறார்.
பாலியல் வன்முறை என்பது இன்று இணையத்தின் உதவியோடு பல்வேறு வடிவில் வந்து நம்மை அச்சுறுத்துகிறது. அதனால் நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கும் ராஜாவுக்கு செக் நிச்சயம் வரவேற்க வேண்டிய முயற்சி.