”ஸ்ட்ரைக்கை சீக்கிரம் முடிங்க..” – விஷாலுக்கு நெருக்கடி!

Get real time updates directly on you device, subscribe now.

மார்ச் 1-ம் தேதி முதல் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முன்னெடுத்து வரும் ஸ்டிரைக் காரணமாக பல படங்களின் ரிலீஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதில் ரஜினியின் ‘காலா’ படமும் ஒன்று. ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட இந்தப்படம் ஸ்டிரைக் காரணமாக தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டது.

ஆனால் இந்தப் போராட்டத்துக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் முடிவுக்கு வராது என்பதில் தயாரிப்பாளர் சங்கம் உறுதியாக நிற்கிறது. இதற்கிடையே காலா ரிலீஸ் தொடர்பாக தடையில்லா அனுமதிக் கடிதம் கேட்டபோது தயாரிப்பாளர்கள் சங்கம் வழங்கவில்லை.

இது தொடர்பாக சில தினங்களுக்கு முன்னர் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரச்னை ஏற்பட்டதாக செய்தி வந்தது.

இப்படி போராட்டம் எப்போது முடிவுக்கு வரும்? என்பது குறித்து யாருக்கும் தகவல் தெரியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த போராட்டம் தொடர்பாக கமல் – ரஜினி இருவரையும் சந்தித்துப் பேசப்போவதாக அறிவித்த விஷால் சில தினங்களுக்கு முன்னால் முதலில் கமலை சந்தித்துப் பேசினார்.

Related Posts
1 of 2,045

அப்போது “போராட்டம் தொடர்ந்தால் சினிமா தொழிலை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். அதனால் போராட்டத்தை சீக்கிரம் முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்று அறிவுரை வழங்கினாராம் கமல்.

அடுத்து ரஜினியை சந்தித்து பேச இருப்பதாக விஷால் கூறியிருந்தார். அதன்படி இன்று ரஜினியை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்து பேசி உள்ளார் நடிகர் விஷால்.

இந்த சந்திப்பில் தமிழ்த்திரையுலக ஸ்டிரைக் காரணங்கள் குறித்தும், ‘காலா’ பட ரிலீஸ் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக திட்டமிட்ட தேதியில் ‘காலா’ படம் ரிலீசாக வேண்டும் என்று ரஜினி விரும்பியதாகவும், அதற்குள்ளாகவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும்படியும் விஷாலிடம் ரஜினி கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத்தின் இந்தப் போராட்டத்தை நசுக்க சில தயாரிப்பாளர்களே திரைமறைவில் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் டிஜிட்டல் நிறுவனங்களுடன் கைகோர்த்துக் கொண்டு சுயநலத்தோடு உள்ளடி வேலைகளைச் செய்து வருகிறார்கள்.

இப்படி நாட்கள் நகர்ந்து செல்லச் செல்ல நாலா பக்கமும் இருந்து ஸ்ட்ரைக்கை விரைந்து முடிக்கச் சொல்லி விஷாலுக்கு நெருக்கடி அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது.