‘விஜய் நடிப்பு என்னை ஈர்த்தது’ : ‘புலி’க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு
சில வதந்திகளையும் மீறி விஜய் நடித்த ‘புலி’ திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது.
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இயக்குநர் சிம்புதேவன் மற்றும் தயாரிப்பாளர்களில் ஒருவராக பி.டி.செல்வகுமார் இருவரும் ”இந்தப்படம் குழந்தைகளை கவரும் விதமாக எடுக்கப்பட்டிருக்கிறது. விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அவர்கள் குடும்பத்தோடு குழந்தைகளோடு கண்டுகளிக்கக் கூடிய வகையில் இருக்கும்” என்று சொன்னார்கள்.
படத்தைப் பார்த்த இயக்குநர் லிங்குசாமி, நடிகர்கள் ஜெயம் ரவி, ஜீவா உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கூட ”விஜய் முதல் முறையாக குழந்தைகளுக்காக படத்தைக் கொடுத்திருக்கிறார். இந்தப் படம் தமிழ்சினிமாவில் ஒரு புதிய முயற்சி. இது போன்ற படங்களை விஜய் தொடர்ந்து தர வேண்டும்” என்று பாராட்டியுள்ளனர்.
இப்படி பல தரப்பிலும் ‘புலி’ படத்துக்கான ஆதரவு பெருகி வரும் நிலையில் நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு விஜய் நடித்த ‘புலி’ திரைப்படம் அவருடைய வீட்டில் பிரத்யேகமாக போட்டுக் காண்பிக்கப்பட்டது.
படத்தைப் பார்த்து ரசித்த ரஜினி மனம் திறந்து பாராட்டியுள்ளார்.
”’புலி’ படத்தை பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது, இது மிகவும் பாராட்ட வேண்டிய முயற்சி. படத்தில் வரும் பிரம்மாண்ட செட்டுகள் என்னை ரசிக்க வைத்தது. படத்தில் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் என்னை மிகவும் பிரம்மிக்க வைத்தன. படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக தயாரித்த ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துகள்.
விஜய்யின் நடிப்பு என்ன ஈர்த்தது, விஜய்யின் இந்த முயற்சியை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும். நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பு அற்புதமாக இருந்தது. ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இந்தப்படம் இருக்கிறது. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை த்ரில்லிங்காக இருந்தது. குழந்தைகளுக்கான அத்தனை அம்சங்களும் உள்ள படம். குடும்பத்தோடு அனைவரும் பார்க்க வேண்டிய படம் புலி. ஹாட்ஸ் ஆப் டூ த புலி டீம்” என்று பாராட்டியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.