விஜய் ஆண்டனியின்‘குட் டெவில்’ தயாரிக்கும் முதல் படம் ‘ரோமியோ’! !
தமிழ் சினிமாவின் பன்முக திறமையாளரான விஜய் ஆண்டனி தற்போது பாக்ஸ் ஆபிஸில் வெற்றிக் கொடுக்கும் ஒருவராக மாறியுள்ளார். அவரது திரைப்படங்கள் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் உள்ள அனைவருக்கும் லாபத்தைக் கொடுத்து அவரை பாக்ஸ் ஆஃபிஸ் நட்சத்திரமாக உயர்த்தியுள்ளது. இசையமைப்பாளராக இருந்து நடிகராகி பின்பு இயக்குநரான விஜய் ஆண்டனி இப்போது தயாரிப்பிலும் கால் பதிக்கும் விதமாக தனது புதிய தயாரிப்பு நிறுவனமான ‘குட் டெவில்’லைத் தொடங்கியுள்ளார். ‘குட் டெவில்’ நிறுவனம் ஆர்வமும் திறமையும் உள்ள புது இயக்குநர்களுக்கு மட்டுமல்லாது மற்ற நடிகர்களின் படங்களையும் தயாரிக்கும் களமாக இது அமையும்.
’குட் டெவில்’ தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பில் வெளியாகும் பான் இந்தியன் லவ் டிராமா திரைப்படம் ‘ரோமியோ’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி மற்றும் பல முக்கிய நடிகர்களும் இதில் நடிக்கின்றனர்.
இப்படத்தை விநாயக் வைத்தியநாதன் இயக்குகிறார்.இந்த படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பது மற்றும் தயாரிப்பைத் தவிர, விஜய் ஆண்டனி படத்தொகுப்பையும் கவனித்து வருகிறார். இவர் ஏற்கனவே ’அண்ணாதுரை’, ’திமிரு புடிச்சவன்’, ’கோடியில் ஒருவன்’, ’பிச்சைக்காரன் 2’ ஆகிய படங்களில் தனது எடிட்டிங் திறமையை நிரூபித்துள்ளார்.