’16 வயதினிலே’ சப்பாணி மாதிரி ஆக்கிட்டாங்க..! : மனம் வெதும்பிய எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே.சூர்யா இயக்கிய குஷி, வாலி இரண்டு படங்களுமே அவருடைய டைரக்ஷன் திறமைக்கு வாழ்நாள் சான்றாக இருக்கின்ற படங்கள்.
அப்படிப்பட்ட திறமையான இயக்குநர் என்றைக்கு ஹீரோ வேஷம் கட்ட ஆரம்பித்தாரோ அன்றைக்கே அவருடைய கேரியர் டேமேஜ் ஆகி விட்டது.
பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவரே தயாரித்து இயக்கி நடித்த இசை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றாலும் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை.
இதனால் புதுப்பட வாய்ப்பு கிடைக்காமல் தேடி வருகிற நடிக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்.
அப்படி அவர் நடிப்பில் வரும் ஜூன் 3-ம் தேதி ரிலீசாகப் போகும் படம் தான் இறைவி.
விஜய் சேதுபதி, பாபி சிம்ஹாவுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யாவும் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஜே.சூர்யா தனது சினிமா கேரியர் குறித்து மனம் வெதும்பி சில கருத்துகளை பேசினார்.
”நான் சினிமாவில் பெரிய நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் தான் சென்னைக்கு வந்தேன். ஆனால் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் டைரக்டரானேன்.
சில படங்களை டைரக்டு செய்த பிறகு படங்களில் நான் ஹீரோவாக நடிக்க தொடங்கினேன். எனது நடிப்பு சிறப்பாக இருந்ததாக பலரும் பாராட்டினர். ரசிகர்களும் என்னை சிறந்த நடிகராக அங்கீகரித்தனர். ஆனால் யாரும் நடிக்க வாய்ப்பு தரவில்லை.
சினிமாவில் முன்னணி நடிகராக வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறவில்லை. டைரக்டர்கள் என்னை நடிகராக ஏற்றுக் கொள்ளவில்லை. நான் எங்கே போனாலும் ஏன் நடிக்கிறீர்கள்? படங்கள் டைரக்டு செய்ய வேண்டியது தானே? என்று கேட்டார்கள்.
’16 வயதினிலே’ படத்தில் வரும் சப்பாணியைப் போலவே என்னை ஒதுக்கினர். அப்படிப்பட்ட சூழலில் இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் தான் எனக்கு ‘இறைவி’ படத்தில் நடிக்க வாய்ப்பு தந்துள்ளார். இதில் என்னை நல்ல நடிகனாகவும் உருவாக்கி இருக்கிறார்” என்றார்.