தமிழ் ரசிகர்களால் தான் இந்த இடத்தில் நிற்கிறேன்! – ஆடியோ விழாவில் உருகிய சாய் பல்லவி
மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சராக ரசிகர்களை ஈர்த்தவர் சாய் பல்லவி. அவரை ‘கரு’ படத்தின் மூலமாக தமிழில் அறிமுகம் செய்கிறார் இயக்குநர் ஏல்.எல்.விஜய்.
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில் தயாராகியிருக்கும் இப்படத்தில் சாய் பல்லவியுடன் நாக சௌர்யாவுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் வெரோனிகா என்ற குழந்தை நட்சத்திரமும் இணைந்து நடித்திருக்கிறார். ஏ.எல்.விஜய்யின் ஆஸ்த்தான ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா கேமராவை கையாள படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார்.
படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சாய் பல்லவி தமிழ் ரசிகர்களால் தான் நான் இந்த இடத்தில் நிற்கிறேன் என்று உருக்கமாகப் பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், ”நான் நடிக்க ஆரம்பித்ததே தற்செயலாக அமைந்தது தான். தமிழ் ரசிகர்களால் தான், நான் இந்த இடத்தில் நிற்கிறேன். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் கொண்டாடி விட்டார்கள். அதனால் நிறைய பொறுப்புகள் இருந்தது.
முதல் படத்தை நல்ல படமாக பண்ணனும்னு நினைச்சேன். அதனால் தான் இவ்வளவு தாமதம். படத்தில் நடிக்கும் போது உணர்வுப்பூர்வமாக படத்தோடு ஒன்றி விட்டோம். பேபி வெரோனிகாவோடு நடிக்கும் போது எனக்கு தான் பிரஷர் அதிகம். எனக்கு நடிப்பில் எமோஷன் முதற்கொண்டு நிறைய விஷயங்களை சொல்லி கொடுத்தவர் இயக்குனர் விஜய் என்றார்.
பின்னர் பேசிய படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய் ‘கரு என் கேரியரில் முக்கியமான படமாக நினைக்கிறேன். இந்தப் படத்தின் கதையை லைகாவிடம் சொன்னேன். இந்த படத்தை எப்போ பண்ணாலும் எங்களுக்கு தான் பண்ணனும் என்று கூறினார்கள். சாய் பல்லவி நிறைய படங்களை நிராகரித்துக் கொண்டிருந்த நேரத்தில், நாங்களும் அவரை இந்த படத்துக்காக அணுகினோம். அவர் முதலில் மறுத்து விட்டார். பின் கதையை சொல்லி அவரை சம்மதிக்க வைத்தோம்.
படத்தின் பெரிய பலமே சாய் பல்லவி தான். அவரை மையமாக வைத்து கதை எழுதும் வகையில் மிகப்பெரிய நடிகையாக வருவார். நிரவ்ஷாவுக்கு 2013லேயே இந்த கதை தெரியும். இந்த நேரத்துக்காக தான் காத்திருந்தோம். எடிட்டர் ஆண்டனி இந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிச்சிருக்கார். என்னுடைய மிகப்பெரிய பலம் மதன் கார்க்கி. நான் சொல்ல விரும்புவதை 2 நிமிடங்களில் பாடலாக சொல்லி விடுவார். இசையமைப்பாளர் சாம் படத்துக்கு பொருத்தமான இசையை கொடுத்திருக்கிறார்.
போஸ்டரில் இருக்கும் குழந்தையும், வெரோனிகாவும் வேறு வேறு குழந்தைகள். நிறைய தேடல்களுக்கு பிறகு இந்த குழந்தையை கண்டுபிடித்தோம். தெய்வத்திருமகள் சாராவுக்கு பிறகு இந்த குழந்தையையும் நீங்கள் கொண்டாடுவீர்கள் என்றார்.
விழாவில் ஆடியோகிராஃபர் ராஜாகிருஷ்ணன், கலை இயக்குனர் ஜெயஸ்ரீ, படத்தொகுப்பாளர் ஆண்டனி, பாடகி ஸ்வாகதா, நடிகர்கள் ஜெயகுமார், டிஎம் கார்த்திக், பேபி வெரோனிகா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.