ஞானத் திமிர் தான் உண்மையான கலைஞனுக்கு அடையாளம்! : மிஸ்கினை புகழ்ந்த நாசர்

மனிதனின் வாழ்க்கையில் கத்தியின் கதாபாத்திரம் என்ன? மனிதனின் அன்றாட வேலை பலுவை குறைக்கும் நோக்கத்தில் தான் கத்தி உருவாக்கப்பட்டது. ஆனால் இன்றைய காலத்தில் அது திருடுவதற்கும், ஒருவரை கடத்துவதற்கும், இன்னும் பல குற்ற செயல்களுக்கும் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது…. இது ஒரு புறம் இருந்தாலும், நாம் யாரும் முழுமையாக தெரிந்து கொள்ளாத கத்தியின் மறுபுறம் இருக்கிறது. அது தான் சிகை அலங்கார கலைஞர்களின் ‘சவரக்கத்தி’.
அத்தகைய சவரக்கத்தியை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் தான், மிஷ்கின் கதை எழுதி, ‘லோன் உல்ப் புரொடக்ஷன்’ சார்பில் தயாரித்திருக்கும் ‘சவரக்கத்தி’.
ஜி ஆர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சவரக்கத்தி’ திரைப்படத்தில் இயக்குனர் ராம் மற்றும் பூர்ணா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவெடுத்து இருக்கும் ‘சவரக்கத்தி’ திரைப்படத்தின் டீசர் வெளியிட்டு விழா சில தினங்களுக்கு முன்பு சென்னை சத்யம் திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
விமர்சையாக நடைபெற்ற இந்த டீசர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் கே பாக்கியராஜ், ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம், நடிகர் நாசர், இயக்குனர் பா ரஞ்சித், இயக்குனர் தியாகராஜா குமாரராஜா, இயக்குனர் பாலாஜி சக்திவேல், இயக்குனர் சசி, நடிகர் பிரசன்னா, செல்வா, எஸ் வி ஆர், தமிழச்சி தங்க பாண்டியன், மருது, நந்த கோபால், வின்சென்ட் செல்வா, தயாரிப்பாளர் ரகுநந்தன், பாவா செல்லதுரை மற்றும் ‘சவரக்த்தி’ படக்குழுவினரான தயாரிப்பாளர் – எழுத்தாளர் மிஷ்கின், இயக்குனர் ஜி ஆர் ஆதித்யா, ராம் – பூர்ணா, ஒளிப்பதிவாளர் கார்த்திக் மற்றும் இசையமைப்பாளர் அரொல் கொரெலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஞானத் திமிர் தான் ஒரு உண்மையான கலைஞனுக்கு அடையாளம். அப்படிப்பட்ட ஒரு உன்னதமான கலைஞன் மிஷ்கின்…அவருடைய படங்கள் யாவும் நம் மனதில் ஆழமாக பதியுமாறு தான் இருக்கும்… அந்த வகையில் ‘சவரக்கத்தி’ திரைப்படமும் மிஷ்கினின் அடுத்த ஒரு அற்புதமான படைப்பாக இருக்கும்.” என்று நம்பிக்கையுடன் கூறினார் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர்.
“பொதுவாகவே மக்கள் இரண்டு இடங்களில் உலக அரசியல் பற்றியும், உலக செய்தியை பற்றியும் காரசாரமாக விவாதிப்பார்கள். ஒன்று ஐ நா சபை, மற்றொன்று முடி திருத்தகம். இப்படிப்பட்ட ஒரு தனித்துவமான கதைக்களம் எப்படி மிஷ்கினின் சிந்தனையில் உதயமானது என்று எனக்கு வியப்பாக இருக்கிறது. இயக்குனர்களை இயக்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆனால் இரண்டு இயக்குனர் சிகரங்களை வைத்து ‘சவரக்கத்தி’ படத்தை இயக்கி இருக்கும் ஜி ஆர் ஆதித்யா அவர்களுக்கும், ஒட்டு மொத்த ‘சவரக்கத்தி’ படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.’ என்று உற்சாகத்த்துடன் கூறினார் இயக்குனர் கே பாக்கியராஜ்.
“நான் என்னுடைய சிறு வயதில் பார்த்த ‘பிச்சை’ என்னும் சிகை அலங்கார கலைஞரின் வாழ்க்கை கதை தான் இந்த ‘சவரக்கத்தி’. இந்த படத்தில் நடித்த ராம் மற்றும் பூர்ணா ஆகிய இருவருமே தங்களின் கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்திருக்கின்றனர். என்னை பொறுத்த வரை தமிழ் சினிமாவில் அழகான ஆண் யார் என்று கேட்டால் அது ராம் என்று தான் சொல்வேன். அதேபோல், கேரளாவில் இருந்து உதயமான கதாநாயகிகளில், தன்னுடைய குரலுக்கு தானே தமிழில் டப்பிங் செய்த முதல் கதாநாயகி பூர்ணா. அவர்கள் இருவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். முதல் முறையாக ஒரு நகைச்சுவை கதையை நான் எழுதி இருக்கிறேன். நிச்சயமாக ரசிகர்களின் பாராட்டுகளை பெறும் திரைப்படமாக எங்களின் ‘சவரக்கத்தி’ திரைப்படம் இருக்கும்.” என்று கூறினார் சவரக்கத்தி படத்தின் எழுத்தாளரும், தயாரிப்பாளருமான மிஷ்கின்.