பயணத்தில் புதிய அனுபவத்தை தரும் ‘சவாரி’
அன்றாடம் சாலையில் நாம் பற்பல வாகனங்களை பார்க்கிறோம். சைக்கிள் முதல் ஹம்மர் வரை ஒவ்வொரு வண்டியும் அதன் விலைக்கும், பயன்பாட்டிற்கும் ஏற்றாற்போல் சவாரி செய்பவருக்கு சொகுசை தரும். எனினும், ஒவ்வொரு பயணமும் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை தரும்.
டேக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சர்வதேச அரங்கில் கப்பல் வணிகத்தில் புகழ் பெற்ற தொழில் அதிபர் வெண் கோவிந்தா தயாரிப்பில் புதுமுக இயக்குனர் குகன் இயக்கும் திரைப்படம் ‘சவாரி’. க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் அறிமுக நாயகன் பெனிட்டோ, சனம்செட்டி, ‘முண்டாசுப்பட்டி’ முனிஷ்காந்த், கார்த்திக் யோகி, கவிதாலயா கிருஷ்ணன் என பலர் நடித்துள்ளனர் .
சதிஷ்குமார் கலையமைப்பில், ஒளிப்பதிவு செய்கிறார் ‘பரதேசி’ புகழ் ஒளிப்பதிவாளர் செழியன், அமரர் கிஷோர் டி.இ படத்தொகுப்பில், சாருகேஷ் சேகர் வரிகளில் விஷால் சந்திரசேகர் ‘சவாரி’ திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
“நாம் அன்றாடம் தெருவிற்கு தெரு, சாலைக்கு சாலை பார்க்கும் ஒரு விஷயத்தை மையமாக வைத்து எடுத்துள்ளோம். க்ரைம் த்ரில்லர் பாணி படங்களில் இதுவரை தொட்டிடாத ஒரு புதிய கதைகளத்தை கொண்டது தான் ‘சவாரி’.
நாளைய இயக்குனர்-3 நிகழ்ச்சியில் இயக்குனர் சிகரம் பாலசந்தர் சார் மற்றும் கமல்ஹாசன் சார் அவர்களிடம் விருது வாங்கினேன். என் முதல் படத்தை இவர்கள் இருவருக்கும் திரையிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன், பாலசந்தர் சார் இன்று நம்மிடையே இல்லை எனினும் அவர் எனக்கு அளித்த கௌரவத்தை ‘சவாரி’ காப்பாற்றும்” என நம்பிக்கையுடன் கூறினார் அறிமுக இயக்குனர் குகன் சென்னியப்பன்.