சேத்துமான் – விமர்சனம்
ஒடுக்கப்பட்டவர்களுக்கான குரலை வருடிக்கொடுப்பது போல் பாவ்லா காட்டும் ஆதிக்க வர்க்கம், அவர்களின் குரல்வளையை எப்போது வேண்டுமானாலும் நெரிக்க தயாராக இருக்கும் என்பதை ஒரு சம்பவத்தின் வழியே பேசியிருக்கும் படம் சேத்துமான்
படத்தின் முதல்காட்சி. மாணிக்கம் தனது பேரன் குமரேசனை காட்டுவழியே (ஊர்வழியே அவர் நடக்கக்கூடாது) பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார். இந்தப்படம் பேசப்போகும் விசயத்தை இந்த முதல்காட்சியே உணர்த்தி விடுகிறது.
கொங்கு தமிழகத்தில் சாதிவெறியின் கோரத்தாண்டவத்தால் தன் மகன் மகளை பறிகொடுத்த மாணிக்கத்திற்கு ஒரே ஆறுதல் தனது பேரன் குமரேசன் தான். அவனை கல்வி வழியே கரையேற்றத் துடிக்கிறார் மாணிக்கம். அதற்கான தடை ஒன்று முளைக்கும் நேரத்திலே…ஊரில் இருக்கும் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த பிரசன்னா காட்டில் பன்னிக்கறி சமைத்துத் தரும் அசைன்மெண்ட் ஒன்றை மாணிக்கத்திடம் கொடுக்கிறார். மாணிக்கம் அதைச் செய்யுமிடத்தில் சிறுவன் குமரேசனும் இருக்கிறான்..அந்த இடத்தில் பல எதிர்பாராத சம்பவங்கள் நடக்க..அந்தச் சம்பவங்களின் முடிவு என்ன என்பதே படத்தின் கதை
படத்தில் வாழ்ந்துள்ள, குமரேசனான மாஸ்டர் அஸ்வின், தாத்தா கேரக்டரில் வரும் மாணிக்கம், பண்ணாடியாக வரும் பிரசன்னா, எதிர்பங்காளியாக வரும் சுருளி, பிரசன்னாவின் மனைவியாக வரும் சாவித்ரி ஆகியோர் நிச்சயமாக கொண்டாடத் தக்கவர்கள். குறிப்பாக ஒரு ஆசிரியர் கேரக்டரும், பன்னிப்பண்ணை வைத்திருக்கும் ஒருவரும் பின்னிவிட்டார்கள். படத்தின் முதல் வெற்றி இவர்கள் அனைவரின் நடிப்பாலும் சாத்தியமாகிறது
பிந்து மாலினியின் பின்னணி இசையில் கொங்கு கிராமம் மனதில் நிறைகிறது. ப்ரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவில் பெருமாள் முருகனின் கதை காட்சிகளாக அப்படியே உருப்பெற்றுள்ளது. எழுத்தாளர் பெருமாள் முருகனின் வறுகறி என்ற சிறுகதை தான் சேத்துமான் என்ற இப்படமாக உருப்பெற்றிருக்கிறது. கதையில் உள்ள வாழ்வியலை துளியும் மாறாமல் படமாக்கி இலக்கியமொழிக்கும் திரைமொழிக்குமான பாலத்தை கண்டடைந்திருக்கிறார் இயக்குநர் தமிழ். பா.ரஞ்சித் தயாரிப்பாளராக பெருமைப்பட்டுக் கொள்ள தோதான மற்றொரு படைப்பு சேத்துமான்
4/5