வாராகி கதை எழுதி தயாரித்து நடிக்கும் அரசியல் சர்ச்சைப் படம் ‘சிவா மனசுல புஷ்பா’
தமிழ்சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர் வாராகி. சர்ச்சைகளுக்கு அஞ்சாதவர். பத்திரிகையாளர், நடிகர், இப்போது கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளராகவும் அவதாரமெடுத்துள்ளார்.
புதிதாக அவர் கதை எழுதி, தயாரித்து நடிக்கும் படத்துக்கு ‘சிவா மனசுல புஷ்பா’ என தலைப்பு வைத்துள்ளார். இது முழுக்க முழுக்க அரசியல் படம். சமீப காலமாக மக்கள் அன்றாடம் பார்த்த, கேட்ட அரசியல் விவகாரங்களின் அடிப்படையில் உருவாாக்கப்பட்ட கதை.
இந்தப் படத்தில் நாயகனாக வாராகி நடிக்கிறார். அவருடன் புதுமுகங்கள் ஷிவானி, நதியாஸ்ரீ, சுதா, டி சிவா, தவசி ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
திரைக்கதை எழுதி இயக்குகிறார் அருந்தவராஜா. இவர் பாலு மகேந்திரா, சேது மாதவன், பாலகுமாரன் உள்ளிட்டோரிடம் பல ஆண்டுகள் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். பல தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு நாக கிருஷ்ணன்.
படத்தைப் பற்றி வாராகி கூறுகையில், “இந்தக் கதை நான் வாழ்க்கையில் சந்தித்த சம்பவங்களின், சர்ச்சைகளின் தொகுப்பு. நிஜத்தில் நடந்தவை. ஒருவருக்கொருவர் இரு எதிர் துருவங்களாக இருக்கும் மக்கள் பிரதிநிதிகளின் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்கள் இந்தக் கதையில் இடம்பெறுகிறது. படம் வெளியாகும்போது பல அதிர்வலைகளை தமிழக அரசியல் சந்திக்கும்,” என்றார்.
ஸ்ரீவாராகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் வாராகி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. தயாரிப்பாளர்கள் டி சிவா, நடிகரும் முன்னால் எம்பியுமான ஜேகே ரித்தீஷ், தயாரிப்பாளர் – இயக்குநர் சுரேஷ்காமாட்சி உள்ளிட்டோர் நேரில் வந்திருந்து வாழ்த்தினர்.