சிலர் நாம் வீழ நினைப்பர்… சிலர் நாம் வாழ நினைப்பர்… சிவகார்த்திகேயன் உருக்கம்!
2016ம் ஆம் ஆண்டு பல பரபரப்புகளை தந்து விட்டு சென்று விட்டது. அதில் முக்கியமாக இடம்பிடித்தது ரெமோ வெற்றி விழாவில் அப்படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன் அழுதது தான்.
”தயவு செய்து என்னை வேலை செய்ய விடுங்கள்”. ”எதுவுமே இங்கே ஈஸியாக கிடைத்து விடுவதில்லை, எல்லாவற்றுக்கும் போராட வேண்டியிருக்கிறது” என்று கண்ணீர் மல்க பேசியது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து நடந்த பஞ்சாயத்துக்கள் பேசி தீர்க்கப்பட்டு தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் மும்முரமாகி விட்டார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு தனக்கு எப்படி இருந்தது என்பதை தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் உருக்கமாக குறிப்பிட்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
அதில் அவர் கூறியிருப்பதாவது :
”சிலர் நாம் வீழ நினைப்பர், சிலர் நாம் வாழ நினைப்பர்.
நம் எண்ணங்கள் சரியானால் நம்முடனே நம்மை விழாமல் தாங்க பலர் தோள் கொடுப்பர்…
கடின உழைப்பும், நேர்மையான முயற்சிகளும் வீண் போகாது இந்த 2016ம் ஆண்டு எனக்கு நிரூபித்திருக்கிறது.
நான் எப்போழுதும் ஒரு நடிகனாக வளர்கிறேன் என்கிற நம்பிக்கையை, என்னால் முடிந்த சிறந்த படங்களை தர வேண்டும் என்ற எண்ணத்தை இந்த ஆண்டில் என் இரண்டு படங்களையும் வெற்றிப்படமாக்கி, எனக்கு கடின உழைப்பின் மீது இருந்த அதீத நம்பிக்கையை அதிகரித்துள்ளீர்கள்.
இத்தருணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த என் ரசிகர்களாகிய சகோதர, சகோதரிகள், என் படக்குழுவினர், பத்திரிகை,தொலைக்காட்சி, இணையதள நண்பர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் அனைத்து மக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
இந்த 2017 மகிழ்ச்சியானதாகவும், ஆரோக்கியமானதாகவும் அமைய அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு சிவகார்த்திகேயன் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.