சொர்க்கவாசல்- விமர்சனம்
நிஜத்தில் கதையை வரலாற்றாக மாற்ற முடியும். சினிமாவில் வரலாற்றை திரைக்கதையாக மாற்றுவதென்பது பெரும் சிரமம். அதை சொர்க்கவாசல் கூட்டணி சாதித்துள்ளதா?
1999-ல் மத்தியச்சிறையில் நடந்த கலவரத்தை மையப்படுத்திய கதை இது. படத்தின் துவக்கத்தில் சிறையில் கலவரம் ஏன் நடந்தது? எப்படி நடந்தது? என்ற விசாரணை நடக்கிறது. விசாரிக்க நட்டி வருகிறார். கருணாஸ் ஹீரோயின் உள்பட பலரும் நட்டியின் விசாரணைக்குப் பதில் சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் பதிலில் ஆர்.ஜே பாலாஜி வருகிறார். அவரின் கதை என்ன? ஜெயில் கலவரத்தில் அவர் என்ன ஆனார்? என்பதாக படத்தின் திரைக்கதை விரிகிறது
படத்தில் நிறைய கேரக்டர்கள். ஒவ்வொரு கேரக்டர்க்கும் ஒரு பின் கதை கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சில ஈர்க்கின்றன. சில தோற்கின்றன. மெயிட் லீட் ஆன ஆர்.ஜே பாலாஜி கேரக்டரை இன்னும் பலமாக படைத்திருக்கலாம். அவரின் நல்ல நடிப்பிற்கு அவரது கேரக்டர் ஆர்க் கனம் சேர்க்கவில்லை. கருணாஸ் கேரக்டரும் செல்வராகவன் கேரக்டரும் நன்றாக எழுதப்பட்டுள்ளது. அவர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். வில்லன் கேரக்டர் மிரட்டல் ரகம். ஹீரோயின் மற்றும் பாலாஜி சக்திவேல், நட்டி ஆகியோர் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளனர்
படத்தின் டெக்னிக்கல் டீம் அனைவருமே நல்ல உழைப்பைக் கொடுத்துள்ளனர். சபாஷ். பின்னணி இசை பிரமாதம். ஒளிப்பதிவாளர் சிறைக்குள்ளே சுற்றிச் சுழன்றுள்ளார்
சிறைக் கைதிகளின் உணர்வுகளும், நிஜமான தேவைகளும் படத்தில் பேசப்பட்டுள்ளன. மேலும் அரசும், அதிகாரிகளும் சிறைக்கைதிகளை தங்கள் லாபத்திற்கு ஏற்றபடி எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதும் பேசப்பட்டுள்ளது. நல்ல மேக்கிங் இருந்த அளவிற்கு, கதாப்பாத்திரங்களோடு நாம் ஒன்றும் ரைட்டிங் இல்லை. அதை மட்டும் சரி செய்திருந்தால் இந்தச் சொர்க்கவாசலுக்கு ரசிகன் இன்னும் ஆவலாய் காத்திருந்திருப்பான்
2.75/5