பேசின சம்பளத்துல பாக்கியே வைக்கல! : சௌந்தர்ராஜாவுக்கு டபுள் சந்தோஷம்

எத்தனை படங்களில் நடித்தோம் என்று கணக்கெடுப்பதை விட எத்தனை படங்களில் பேசிய சம்பளத்தை முழுமையாக வாங்கினோம் என்று கணக்கெடுப்பது ஈஸி.
ஏனென்றால் சினிமாவில் சொன்ன வாக்கைக் காப்பாற்றுகிற தர்மபிரபுகள் மிகவும் குறைவு.
”இந்தப் படத்துல எனக்கு சம்பளமே தரல” என்று சில நடிகர்கள் விழா மேடையிலேயே வெளிப்படையாகக் கேட்பார்கள். இன்னும் சிலரோ ”எனக்கு பாக்கி வரவில்லை” என்பார்கள்.
ஆனால் முதல் முறையாக நான் நடித்த படங்களில் பேசிய சம்பளத்தை பாக்கி வைக்காமல் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் இதுதான் என்று சந்தோஷப்பட்டார் ‘தங்க ரதம்’ படத்தின் இரண்டு ஹீரோக்களில் ஒருவரான செளந்தர்ராஜா.
என்.டி.சி மீடியா மற்றும் வீகேர் புரொடக்ஷன் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படம் வருகிற மார்ச் 24 ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய செளந்தர்ராஜா “சுந்தரபாண்டியன் படத்தில் நடித்து முடித்த பிறகு இப்படத்தின் கேரக்டர் குறித்து இயக்குநர் பாலமுருகன் என்னிடம் தெரிவித்தார். இப்படத்தில் நாயகிக்கு அண்ணன் கேரக்டரில் நடிக்கிறேன். கோபக்காரனாகவும், பாசக்காரனாகவும் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறேன்.
இதுவரை இருபது படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். ஆனால் இப்படத்தில் தான், தயாரிப்பாளர் எனக்கு பேசிய சம்பளத்தை முழுதாக கொடுத்து என்னை அசத்தினார். 24 ஆம் தேதியன்று நான் நடித்த மற்றொரு படமும் வெளியாகிறது. அதனால் இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கிறேன்” என்றார்.
படத்தின் நாயகன் வெற்றி பேசும் போது,
“நான் கதையின் நாயகனாக அறிமுகமாகும் முதல் படம் இது. பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்வதும் இது தான் முதல்முறை.இதற்கு முன் ‘எனக்குள் ஒருவன்’ என்ற படத்தில் ஒரு கேரக்டர் ரோலில் நடித்திருந்தேன். ஸ்ட்ராபெர்ரி படத்தில் வில்லனாக நடித்திருந்தேன். ஆனால் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறேன்.
கூத்துப்பட்டறை முத்துசாமி சார் தான் என்னை பட்டைத் தீட்டிய குரு. இது மண் மணம் மாறாத கிராமத்துக் காதல் கதை.
இப்படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் கே.பாக்யராஜ் பாராட்டியது எனக்கு உற்சாகத்தை அளித்தது. இந்த படத்தின் கேப்சன் ‘ஏ ஜர்னி ஆஃப் ஹோப்’ என்றிருக்கும். அதாவது நம்பிக்கையின் ஒரு பயணம் என்றிருக்கும். படத்தின் பாடல்கள் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன.
ஆடியோவிற்கு ஆதரவு அளித்தது போல் படத்திற்கும் பெரிய அளவில் ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.’ என்றார்.